ஆந்திராவின் அமைந்துள்ளது அனகபள்ளி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ரெகுபலேனி. இங்கு வசிதது வருபவர் அலிமுல்லா. இவர் இந்திய ராணுவ வீரர் ஆவார். ஜம்மு – காஷ்மீரில் உள்ள பரமுல்லாவில் 52 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கேம்ப்-ல் உள்ளார். இவருக்கு இந்திய ராணுவத்தில் 2 மாத விடுமுறை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ராணுவம் விடுமுறை வழங்கியதால் அவர் தற்போது அனகபள்ளியில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.


பெண்கள் பாதுகாப்பு செயலி:


ஆந்திர பிரதேச அரசு அந்த மாநில பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திஷா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரெகுபலேனியில் உள்ள பரவடா சந்தபயலு என்ற இடத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் இந்த செயலியை பற்றி பொதுமக்களிடம் விளக்க போலீசார் முடிவு செய்திருந்தனர்.


இந்த நிலையில், நேற்று ராணுவ வீரர் அலிமுல்லா பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அதே பேருந்து நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கிருந்த மக்களை ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அங்கே பேருந்துக்கு நின்றிருந்த அலிமுல்லாவிடம் அவரது செல்போனில் திஷா செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது போலீசுக்கும், ராணுவ வீரர் அலிமுல்லாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.






ராணுவ வீரர் - போலீசார் மோதல்:


இதனால், காவல்துறையினரிடம் அவர்களது அடையாள அட்டையை காட்டுமாறு அலிமுல்லா கேட்டுள்ளார். இதனால், அலிமுல்லாவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சமாதனப்படுத்த முயற்சித்தும் வாக்குவாதம் தொடர்ந்துள்ளது. அப்போது, காவல்துறையினர் சிலர் அலிமுல்லாவை வலுக்கட்டாயப்படுத்தி அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.


ஆனால், அவர் அந்த ஆட்டோவில் ஏற மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர், நான்கு போலீசார் அவரை காலரை பிடித்து இழுத்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். ராணுவ வீரர் ஆட்டோவில் காவல்துறையினரால் வலுக்கட்டாயப்படுத்தி ஏற்றிச் சென்ற சம்பவம் அங்கிருந்தோரால் வீடியோவாக எடுக்கப்பட்டது.


விசாரணைக்கு உத்தரவிட்ட எஸ்.பி.


இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பெரும் பேசுபொருளானது. பின்னர், இந்த சம்பவம் குறித்து அறிந்த எஸ்.பி. முரளிகிருஷ்ணா பரவடா காவல்நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், ராணுவ வீரரை வலுக்கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றிய காவல்துறையினர் 4 பேர் மீதும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து எஸ்.பி.யிடம் ராணுவ வீரர் அலிமுல்லா விரிவாக விளக்கமும் அளித்துள்ளார்.


இந்த சம்பவத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.