கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஸ்ரீநாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் முபாரக் பாஷாவுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் குறித்து பாஷா நவம்பர் 4ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் அம்மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், 24 மணி நேரத்திற்குள் ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் கெடு விதித்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. 


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, பாதிக்கப்பட்ட அனைத்து துணை வேந்தர்களும் ஆளுநரின் உத்தரவை மதிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கியது. திங்கட்கிழமை காலை 11:30 மணிக்குள் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டிருந்தார்.


கேரள ஆளுநர், மாநில அரசுக்கு இடையேயான அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது.


 ஒன்பது பல்கலைக்கழகத் துணை வேந்தர்களில் இருவர் ஏற்கனவே தங்கள் பதவியில் இருந்து விலகி உள்ளனர். கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.பி. மகாதேவன் பிள்ளை ஓய்வு பெற்று விட்டார். மேலும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.எஸ். ராஜஸ்ரீயின் நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இவை தவிர்த்து மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல் ஆய்வுப் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களுக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார்.


இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கண்ணூர், மலையாளம் மற்றும் மீன்வளம் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் நியமனங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பதுதான்.




என்ன காரணம்?


ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக எம்.எஸ்.ராஜஸ்ரீ நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் அக்டோபர் 21ஆம் தேதி அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்து இருந்தது. துணைவேந்தரைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு சரியாக அமைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி இருந்தது.


மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்ட விதிமுறைகளின்படி, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அதிலிருந்து, ஒருவரை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் ராஜஸ்ரீயின் நியமனம் யுஜிசி விதிமுறைகளை மீறியதாக மனுதாரர் கூறிய கருத்தையும் நீதிமன்றம் ஏற்று, இந்த உத்தரவைப் பிறப்பித்தது.



இந்த நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஸ்ரீநாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் முபாரக் பாஷாவுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் குறித்து பாஷா நவம்பர் 4ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


துணை வேந்தர் நியமனம் யுஜிசி விதிமுறைகளை மீறியும் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடைபெற்றுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் கேரள ஆளுநர் தெரிவித்துள்ளார்.