Hema Report: மலையாள சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி கே. ஹேமா தலைமையிலான ஆணையம் அறிக்கை ஒன்றை தயார் செய்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பே, கேரள அரசிடம் அது சமர்பிக்கப்பட்டது.
மலையாள சினிமாத்துறையை தோலுரித்த ஹேமா கமிஷன்:
சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அந்த அறிக்கையில் விரிவாக பேசப்பட்டுள்ளது. பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக உடன்பட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
235 பக்கம் கொண்ட அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தங்கள் அனுமதி இன்றி ஹோட்டல் அறைகளில் ஆண் சகாக்கள் நுழைவார்கள் என்றும் காவல்துறையில் புகார் அளிக்க முற்பட்டால் சினிமாவில் தடை விதித்துவிடுவோம் என மிரட்டுவார்கள் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். திரைப்படம் எடுக்கும் செட் அருகே தங்குவதற்காக ஏற்பாடு செய்து தரப்படும் இடம் பாதுகாப்பாக இருக்காது என்றும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் குடும்பத்தினருடன்தான் செட்டில் இருப்போம் என்றும் பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மோசமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்கள்: "சினிமா துறையில் தங்கள் அனுபவங்களை வெளியே சொல்வதன் மூலம் அபாயம் இருப்பதாக பெண்கள் கூறினர். தாங்கள் கூறிய உண்மைகள் அவர்களை சித்திரவதை செய்தவர்களின் காதுகளுக்கு எட்டினால், மிகப்பெரிய ஆபத்து நேரிடும்.
குற்றம் செய்தவர்கள், மிகவும் செல்வாக்கு படைத்தவராக உள்ளனர். சினிமாவில் பெண்கள் அனுபவித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களை கேட்கும்போது அதிர்ச்சியான அனுபவமாக இருந்தது. திரைப்பட செட்டில் சுத்தமான கழிவறை மற்றும் உடை மாற்றும் அறை போன்ற அடிப்படை மனித உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.
மாதவிடாய் காலங்களில் பெண் கலைஞர்கள் கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர். சிறுநீர் போகாமல் இருக்க நீண்ட காலத்திற்கு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க பெண்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
ஒட்டுமொத்த மலையாள திரையுலகையே சில ஆண்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் சினிமாவில் பணிபுரியும் மற்ற நபர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சினிமாவில் இந்த நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.