ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் சமோசாவை சாப்பிட்ட 3 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தை உலுக்கிய சம்பவம்: கோடௌரட்லா மண்டலத்திற்கு உட்பட்ட கைலாசா நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் நேற்று சமோசா சாப்பிட்ட 27 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் 3 பேர் அனகாப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தனர்.


முதலாம் வகுப்பு படிக்கும் ஜோசுவா, மூன்றாம் வகுப்பு படிக்கும் பவானி மற்றும் ஷ்ரத்தா ஆகிய மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 குழந்தைகள் நர்சிபட்டினம் மற்றும் அனகப்பள்ளியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதில், 7 குழந்தைகள் நர்சிபட்டினத்தில் உள்ள மருத்துவமனையிலும், 17 குழந்தைகள் அனகப்பள்ளியில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றன. நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு (கேஜிஹெச்) மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்தது என்ன? இறந்த குழந்தைகள் வசித்து வந்த ஆதரவற்றோர் இல்லத்தை அரசு சாரா அமைப்பு நடத்தி வந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 60 குழந்தைகள், இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர்.


அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் கே.விஜயா, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி அப்பா ராவ் விசாரணை மேற்கொண்டுள்ளார். உணவு தயாரிப்பதில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஒய்.சத்ய குமார் மற்றும் அனகாப்பள்ளி மாவட்ட கலெக்டர்கள், அல்லூரி சீதாராமராஜு ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.