காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி இன்று விமானம் மூலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாண்டி, நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கேரள மருத்துவமனையில் அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, மருத்துவமனையில் இருந்த உம்மன் சாண்டி, சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.
உம்மன் சாண்டி உடல் நிலை:
பின்னர், தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்த உம்மன் சாண்டி, "எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த சர்ச்சைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை" என்றார். உம்மன் சாண்டியுடன் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் பெங்களூருவுக்கு சென்றுள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பெங்களூரு மருத்துவமனைக்கு உம்மன் சாண்டியை மாற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது" என்றார்.
உம்மன் சாண்டியின் உடல் நிலை மோசமானதாக பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில், உம்மன் சாண்டிக்கு முறையான மருத்துவ உதவி மறுக்கப்படுவதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு மத்தியில், தன்னுடைய மகனுடன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், "எனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் உரிய கவனிப்பு அளித்தனர்" என தெளிவுப்படுத்தினார். இதற்கிடையே, உம்மன் சாண்டியின் தம்பி உட்பட அவரது நெருங்கிய உறவினர்கள் 42 பேர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினர்.
இந்த விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு, அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உம்மன் சாண்டிக்கு 2019ஆம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு தொண்டை தொடர்பான நோய் தீவிரமடைந்ததையடுத்து அவர் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 1970ஆம் ஆண்டு முதல் புதுப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான சாண்டி, இரண்டு முறை கேரள முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று கேரளாவில் ஆட்சியை தக்க வைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி. கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில், ஒரு கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததே இல்லை. ஆனால், வரலாற்றை மாற்றி ஆட்சியை தக்க வைத்தது இடது ஜனநாயக முன்னணி.