கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இவருடைய மரணத்திற்கு கணவர் கிரண் குமாரின் குடும்பம் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் கிரண் குமார் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார். இதுமட்டுமின்றி மேலும் 2 பெண்கள் தங்களுடைய கணவர் வீட்டில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தின் வள்ளிகுன்னம் பகுதியைச் சேர்ந்தவர் சுசித்ரா(19) என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுசித்ராவின் தற்கொலைக்கு உரிய காரணம் இன்னும் தெரியவில்லை. அதேபோல, வெங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா(24) என்பவர் தன்னுடைய கணவர் வீட்டில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் இறந்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களுக்குள் 3 பெண்கள் தங்களுடைய கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த மரணங்களுக்கெல்லாம் பிரதான காரணமாக சொல்லப்படுவது வரதட்சணை கொடுமை. கேரளாவில் மட்டுமே 13 ஆண்டுகளில் 212 மரணங்கள் வரதட்சணை கொடுமையால் அரங்கேறியுள்ளது. இது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட மரணங்கள் மட்டுமே. மகளுக்கான அன்பளிப்பு, எங்களால் முடிந்த பரிசு என பெண் வீட்டார் கொடுத்துப்பழக்கப்பட்ட வரதட்சணை உயிர்களை காவு வாங்கத் தொடங்கியுள்ளது. பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டும் வரதட்சணை முடிவுக்கு வராதது ஏன்?

ஆண்டுவாரியாக வரதட்சணை உயிரிழப்புகள்:

2009 21
2010 21
2011 15
2012 32
2013 21
2014 28
2015 8
2016 25
2017 12
2018 17
2019 6
2020 6

பெண்ணுக்கு இவ்வளவு நகை போட்டோம், நிலம் கொடுத்தோம், கார் கொடுத்தோம் என இன்று வரை கல்யாண வீடுகளில் குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் கேரளா வரதட்சணை தடுப்பு சட்டத்தின் படி  1961 முதலே வரதட்சணை என்பது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் விருப்பத்தின் பேரில் கொடுக்கிறோம் என்ற எல்லைக்குள் வருவதால் இன்றும் வரதட்சணை குறித்து சட்டத்தால் கேள்வி எழுப்ப முடியவில்லை. மிகச்சொற்பமானவர்களே வரதட்சணை புகாரை அளிக்கின்றனர். இது குறித்து பேசிய, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு  துறை இயக்குநர் அனுபமா, '' எங்களுக்கு வரதட்சணை புகார்கள் வருவதே இல்லை. யாராவது புகார் கொடுத்தாலும் நாங்கள் விசாரணையை தொடங்கும்போது இரு வீட்டாரும் பேசி முடித்துக்கொள்கிறார்கள்'' என்றார்.


வரதட்சணை புகார் குறித்து பேசிய வட கேரளாவின் மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அதிகாரி ‘குடும்ப வன்முறை தொடர்பான அறிக்கை தயார் செய்யும்போதும் கூட வரதட்சணை தொடர்பான இடம் காலியாகவே உள்ளது. நகையும், பணமும் பரிசாகவே பெறப்பட்டது. அது வரதட்சணை இல்லை என பெண்களே குறிப்பிடுகிறார்கள். அதனால் சில பிரச்னைகளை வரதட்சணையின் கீழ் கொண்டுவர முடியவில்லை என்றார். இது குறித்து மேலும் பேசிய அதிகாரிகள், வரதட்சணை புகார்களும், பிரச்னைகளும் குடும்பத்தினரிடையே பஞ்சாயத்து பேசி முடித்து வைக்கப்படுகிறது. பல காவலர்களும் இதைத்தான் ஊக்குவிக்கிறார்கள். வரதட்சணை புகாரை கையாளுவதில் என்னதான் சிக்கல் எனப்பேசிய தென் கேரளாவின் மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அதிகாரி, '' எங்களால் எதுவுமே செய்ய முடியவதில்லை. வரதட்சணை கொடுமை  என்றாலும் பெண் வீட்டார் சமூகத்திற்காகவும், மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கூறிக்கொண்டும், அமைதியாக இருந்து விடுகின்றனர். பெண் வீட்டாரின் ஆதரவு இல்லாமல் வழக்கை எங்களால் கையாள முடிவதில்லை. ஆனால் போலீசார் இதனை சட்டத்தின்படி அணுகலாம். அவர்களும் செய்வதில்லை என்றார்.


சட்டங்கள் இயற்றப்பட்டாலும் வரதட்சணை முடியாமல் நீள்வது ஏன் என விளக்கம் அளித்த வழக்கறிஞர் ஆஷா, ''வரதட்சணை கொடுப்பது சமூகத்தின் ஒரு அங்கமாகவே கொண்டு வரப்பட்டுவிட்டது. அதில் மாற்றம் வேண்டும். பெற்றோரின் சொத்துகளை அடுத்து அனுபவிப்பது ஆண் பிள்ளைகள் தான் என்ற புள்ளியில் இது தொடங்குகிறது. ஆண் பிள்ளைகள் சொத்துகளை ஆள்வார்கள் என்பதால் பெண்களுக்கு திருமணத்தின்  போதே நகையும், பணமும் கொடுக்கிறோம் என்ற விதிக்குள் குடும்பங்கள் சென்றுவிட்டன.  சொத்துகள் ஆண், பெண் பேதமின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சரிசமமாக பிரித்துக்கொடுக்கும் நிலை வந்தால்தான் வரதட்சணைக்கான முடிவுப்புள்ளி வரும்'' என்றார்.