கேரளாவின் வில்ஃபிரட் மானுவல் தனது இளைய மகள் ஏஞ்சலுடன் நீச்சல் பயிற்சிக்காக மூலாம்குழி கடற்கரைக்குச் சென்றிருக்கிறார்.அப்போது கடற்கரையில் ஏதோ நடமாடுவதைக் கண்ட அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அது காயமடைந்த டால்பின்.வில்ஃபிரட்டும் அவரது மகளும் டால்பினை கடலுக்குத் தள்ள முயற்சித்தாலும் அது மீண்டும் மீண்டும் கரைக்குத் திரும்பியது.அப்போதுதான் அதன் வயிற்றுப் பகுதியிலும் துடுப்புப்பகுதியிலும் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். 






"டால்பின் மீன்பிடி படகில் மோதியதால் அடிபட்டிருக்கக் கூடும் மேலும் மற்ற மீன்களின் தாக்குதலுக்கு பயந்து அது கரை ஒதுங்கியுள்ளது என நான் கருதுகிறேன்" என்று வில்ஃபிரட் கூறினார். அடுத்து மற்ற மீனவர்களின் உதவியுடன், வில்ஃபிரட் டால்பினை மீண்டும் கடலுக்குள் தள்ள முயன்றார்,ஆனால் அது செல்ல மறுத்தது. பின்னர் காலை 9.30 மணியளவில் வில்ஃபிரட் அதனைக் கடலுக்குள் சுமந்து சென்று ஒரு கி.மீ. தூரம் நீந்தி சென்று விட்டு வந்துள்ளார். 


மேலும் அவர் அதுகுறித்துப் பகிர்ந்துகொள்கையில், “நான் நீந்தும்போது டால்பினை ஒரு கையால் பிடித்தேன். அது சுமார் 2.மீ நீளம் கொண்டது.அதன் இதயம் மிக வேகமாகத் துடித்ததை என்னால் உணர முடிந்தது. இந்த டால்பினுக்கான உதவி கோரி மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்புகொள்ள முயன்றபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அதை மீண்டும் கடலுக்கு அனுப்ப முடிவு செய்தோம்,” என்றார் வில்ஃபிரட். டால்பின்கள் மீனவர்களின் சிறந்த நண்பர்கள் என்றும், கடந்த காலங்களில் பலமுறை துன்பத்தில் சிக்கிய மீனவர்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.


டால்பினை கடலில் சேர்த்த வில்ஃபிரட் முண்டம்வெளியில் இன்டர்டைவ் டைவிங் சர்வீசஸ் என்னும் நீச்சல் மையத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.