கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை அருகே கர்ப்பிணிப் பெண்ணும், அவரது கணவரும் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பின்னால் இருந்தவர்கள் தப்பினர் 


2020 மாடல் மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரில் ஆறு பேர் பயணம் செய்ததாகவும், கார் தீப்பிடித்ததில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நான்கு பேர் தப்பியோடியதாகவும் போலீசார் தெரிவித்தனர். பிழைத்த நான்கு பேரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். “அந்த நான்கு பேருக்கு காயம் எதுவும் இல்லை. அவர்கள் மருத்துவமனையில் நலமாக உள்ளனர், பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள், ”என்று கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் அஜித் குமார் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.



தம்பதி உயிரிழப்பு


கண்ணூர் மாவட்டம் குட்டியாட்டூரைச் சேர்ந்த ரீஷா (26) மற்றும் அவரது கணவர் பிரஜித் (35) ஆகியோர் இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தனர். ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ள செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். பிரிஜித் மற்றும் ரீஷா காரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டபோது அவர்கள் உயிருடன் இல்லை என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.  


தொடர்புடைய செய்திகள்: HBD Simbu : எண்டே கிடையாது டா.. தமிழ் சினிமாவில் தனி நாற்காலி.. சிம்பு பிறந்தநாள் இன்று..


நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்


கார் எப்படி தீப்பிடித்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சரிபார்த்த பின்னரே சரியான காரணம் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது. “நிபுணர்கள் உதவியுடன் கார் முறையாக ஆய்வு செய்யப்படும். இன்னும் கொஞ்சம் விசாரணை நடைபெறும், அப்போதுதான் என்ன நடந்தது என்பது குறித்து தெளிவு கிடைக்கும்” என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் பின்பக்க கதவை அவர்கள் நால்வரும் திறந்துவிட்டதாகவும், முன்பக்க கதவை தம்பதியால் திறக்க முடியவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.






காப்பாற்ற முயன்ற ஊர்மக்கள்


இதுகுறித்து போலீஸ் கமிஷனர் குமார் கூறியதாவது, "எரிந்த காரின் முன்பக்க கதவை திறக்க முடியாததால், அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, பெண் கர்ப்பமாக இருந்ததாகவும், அவர்கள் காரின் முன் கதவைத் திறந்து தம்பதியைக் காப்பாற்ற முயன்றதாகவும் கூறுகின்றனர், ஆனால் அதிலும் பலன் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள், தீப்பிடித்து எரியும் காரின் அருகே கூடியதால், அதற்குள் சிக்கிக் கொண்ட தம்பதியினரை மீட்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன", என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், "அந்த நேரத்தில் நாங்கள் முற்றிலும் உதவியற்றவர்களாக இருந்தோம், எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஏனெனில் காரின் முன் பக்கம் உடனடியாக தீயில் மூழ்கியது. காரின் ஆயில் டேங்க் எந்த நேரத்திலும் வெடித்துவிடும் என்ற அச்சத்தில் இருந்ததால் அவர்களைக் காப்பாற்ற எங்களால் அதிகம் முயற்சி எடுக்க முடியவில்லை”, என்று நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.