கேரளாவில் கடந்த சில தினங்களாக காவலர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரின் மதுவை கீழே ஊற்ற வைத்த காவலரை பணியிடை நீக்கம் செய்த விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மங்களூரின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லம் மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் கண்ணூர் – வடகாரா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகரும், அவருடன் ரயில்வே போலீசார் ஒருவர் வந்துள்ளனர். அவர்கள் டிக்கெட்டை பரிசோதித்து வந்தபோது, ஒருவர் மதுபோதையில் அமர்ந்துள்ளார். அவரிடம் வந்த ரயில்வே போலீசார் டிக்கெட்டை காட்டுமாறு கூறியுள்ளனர். அவர் டிக்கெட்டை தனது பாக்கெட்டுகளில் தேடியுள்ளார்.
அவர் தேடிக்கொண்டிருந்தபோதே அந்த போலீஸ் தான் காலில் அணிந்திருந்த பூட்சால் அந்த பயணியை அவரது நெஞ்சிலே எட்டி உதைத்தார். மதுபோதையில் இருந்த ஒரு பயணியை ரயில்வே போலீசார் ஒருவர் சரமாரியாக காலால் எட்டி உதைத்ததை கண்டு ரயில் பெட்டியில் இருந்த சக பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதை அங்கிருந்த சக பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அந்த காவலருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்கின்றனர்.
இந்த வீடியோவை எடுத்த பயணி இந்த சம்பவம் தொடர்பாக கூறும்போது, உதவி காவல் ஆய்வாளரும், மற்றொரு காவலரும் அந்த பயணியிடம் டிக்கெட் கேட்டனர். அந்த பயணி டிக்கெட்டை தேடிக்கொண்டிருந்தபோதே, அந்த காவலர் அவரை எட்டி உதைக்கத் தொடங்கினார். மிகவும் கொடூரமாக அவரது நெஞ்சில் எட்டி உதைத்தார். இதனால், அந்த பயணி தரையில் விழுந்துவிட்டார். தரையில் விழுந்தபிறகும் அந்த காவலர் அவரைத் தொடர்ந்து தாக்கினார். அதன் பின்னரே, டிக்கெட் பரிசோதகர் வந்தார். மேலும், என்னிடம் வந்து எடுத்த வீடியோவை காட்ட சொன்னார். பின்னர், என்னிடம் டிக்கெட்டை காட்டச் சொன்னார். நான் டிக்கெட் பரிசோதகரிடம் மட்டுமே டிக்கெட்டை காட்டுவேன் என்று கூறினேன். கடைசியில் அந்த பயணியை வடகாரா ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டனர்.“ இவ்வாறு அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.ஐ. இதுதொடர்பாக கூறும்போது, தான் அந்த பயணியை தாக்கவில்லை என்றும், அவர் டிக்கெட் இல்லாமல் பயணித்ததால் அவரை இறக்கிவிட்டோம் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்