"தண்ணில எச்சி துப்பி கொடுத்தாங்க" தொடரும் ராகிங் கொடுமை.. சீனியர் மாணவர்கள் அட்டூழியம்!
சீனியர் மாணவர்கள், தன்னுடைய ஷர்ட்டை கழற்றி முட்டி போட வைத்ததாகவும் தண்ணீரில் எச்சில் துப்பி கொடுத்ததாகவும் கேரள அரசு கல்லூரி மாணவர் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் மீண்டும் ராகிங் கொடுமை அரங்கேறியுள்ளது. சீனியர் மாணவர்கள், தன்னுடைய ஷர்ட்டை கழற்றி முட்டி போட வைத்ததாகவும் தண்ணீரில் எச்சில் துப்பி கொடுத்ததாகவும் அரசு கல்லூரி மாணவர் புகார் அளித்துள்ளார்.
கேரளாவில் மீண்டும் ராகிங் கொடுமை:
கேரளாவில் காரியவட்டம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு உயிரி தொழில்நுட்ப பாடப்பிரிவை சேர்ந்த மாணவர் பின்ஸ் ஜோஸ். கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி, கல்லூரி வளாகத்தில் ஏழு சீனியர் மாணவர்கள் கொண்ட குழுவால் தான் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில், கேரள கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளே, அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் பின்ஸ் ஜோஸ், தனக்கு நேர்ந்த ராகிங் கொடுமை குறித்து விவரிக்கையில், "நானும் என் நண்பன் அபிஷேக்கும் கல்லாரி வளாகத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அப்போது சீனியர்கள் குழு ஒன்று எங்களைத் தடுத்து நிறுத்தி என்னை அடிக்கத் தொடங்கியது. என் நண்பன் அங்கிருந்து ஓடிப்போய் முதல்வரிடம் தகவல் தெரிவிக்கச் சென்றான்.
சீனியர் மாணவர்கள் அட்டூழியம்:
பின்னர், என்னை யூனிட் அறைக்கு அழைத்துச் சென்று அங்கே பூட்டி வைத்தனர். என் சட்டையை கழற்றி, என்னை மண்டியிட வைத்தார்கள். நான் குடிக்க தண்ணீர் கேட்டபோது, மூத்த மாணவர்களில் ஒருவர் அரை கிளாஸ் தண்ணீரில் துப்பிவிட்டு அதைக் கொடுத்தார்.
இந்த சம்பவத்தைப் பற்றி யாரிடமாவது சொன்னால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனியர் மாணவர்கள் என்னை மிரட்டினர். மேலும், எனது நண்பர், என்னை அடித்ததாக கூறி, அவர் மீது புகார் அளிக்கும்படி கட்டாயப்படுத்தினர்" என்றார்.
இதுகுறித்து கேரள காவல்துறை தரப்பு பேசுகையில், "கேரள ராகிங் தடைச் சட்டம் 1998 இன் விதிகளின்படி, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிறுவனத்தில் ஏதேனும் ராகிங் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் பிரிவுத் தலைவரிடம் (முதல்வர்) ஒரு கோரிக்கையை நாங்கள் சமர்ப்பித்தோம்.
இது தொடர்பாக திங்களன்று கல்லூரி முதல்வர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, மாணவரின் புகார் சரியானவை என்பதை உறுதிப்படுத்தினார். அறிக்கை எங்களுக்குக் கிடைத்தவுடன், வழக்கில் ராக்கிங் பிரிவுகளையும் சேர்த்துள்ளோம்" என தெரிவித்துள்ளது.