உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடந்து வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா என்பதால் இந்த கும்பமேளாவில் பங்கேற்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். வரும் 26ம் தேதி வரும் சிவராத்திரியுடன் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
மகாகும்பமேளா
மகாகும்பமேளாவில் பங்கேற்பதற்காக தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வட இந்தியாவைப் பொறுத்தவரை ஆன்மீக பற்று எந்தளவு அதிகளவு உள்ளதோ, அதே அளவு மூடநம்பிக்கையும் அதிகளவு உள்ளது. தற்போது கும்பமேளாவில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது, பிரயாக்ராஜில் உள்ள மேம்பாலத்தை பக்தர்கள் தெய்வமாக தொட்டு வணங்கி வருகின்றனர்.
ப்ளை ஓவர் பாபா:
அந்த பாலம் வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த பாலத்தை தொட்டு வணங்கி விட்டுச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பாலம் மற்ற மேம்பாலங்களைப் போல வாகனங்கள் வந்து செல்வதற்காக கட்டப்பட்ட ஒரு சாதாரண மேம்பாலம் ஆகும்.
வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக கட்டப்பட்ட ஒரு சாதாரண மேம்பாலம் இந்த பாலம் ஆகும். ஆனால், இந்த மேம்பாலத்தை கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் பலரும் ஆன்மீக சின்னமாக கருதி இப்படி வழிபட்டுச் செல்வது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
மூடநம்பிக்கையின் உச்சம்:
பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து மக்களின் மூடநம்பிக்கையின் உச்சம் என்றும், மக்களுக்கு போதிய கல்வி அறிவு வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மகாகும்பமேளாவில் தற்போது வரை சுமார் 60 கோடி மக்கள் வரை பங்கேற்றுள்ளதாகவும், அதில் கோடிக்கணக்கான மக்கள் நீராடி வரும் நதி ( கங்கை, யமுனை கலக்கும் இடம்) குளிப்பதற்கு தகுதியற்றது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அந்த நீரில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் நீராடி வருவதும், அந்த நீரை தீர்த்தமாக பருகி வருவதும் நடந்து வருகிறது.
சுற்றுச்சூழல் மாசு காரணமாக மிகவும் தூய்மையாக இருந்த கங்கை, யமுனை நதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுவருகிறது. இந்த நதிகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மகாகும்பமேளாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தினசரி நீராடி வருவதும், அவர்களது ஆடைகளை அங்கேயே நீரிலே விட்டுச் செல்வதும் நதியில் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில், மூடநம்பிக்கையின் உச்சமாக மேம்பாலத்தை தொட்டு வணங்குவது பலரது மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.