திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதர பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் 16 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனை குறிவைத்து பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார்.
தனது உயிருக்கு ஆபத்து என்பதால் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் முதலில் தெரிவித்தார் ஸ்வப்னா. திருவனாதபுரம் யு.ஏ.இ தூதரகத்தில் இருந்து பிரியாணி பாத்திரத்தில் உலோகம் போன்ற பொருள்கள் முதல்வரின் கிளிப் ஹவுசுக்கு சென்றதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் தீவிரவாதி ஒருவரை தப்பிக்க பினராயி விஜயன் உதவியதாக அடுத்த ஷாக் தகவலை கூறியுள்ளார் ஸ்வப்னா. இது குறித்து தெரிவித்த அவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொச்சியில் பிடிபட்ட எகிப்து நாட்டைச் சேந்த தீவிரவாதி ஒருவரை பினராயி விஜயன் தப்பிச்செல்ல உதவினார்.2017ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. தீவிரவாதி கைது செய்யப்பட்ட தகவல் திருவனந்தபுர அமீர துணைத்தூதருக்கு கிடைத்தது. அவர் என்னை அழைத்து பினராயி விஜயினடம் பேசி அந்த நபரை தப்பிக்க வைக்கவேண்டுமென கூறினார். அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் இந்த விவரத்தை நான் கூறினேன்.
முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஜாமினில் அவரை விடுவிக்க உத்தரவு வந்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். அன்றே அவர் இந்தியாவில் இருந்து தப்பித்துச்சென்றுவிட்டார். அந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் அதன்பின்னர் நடக்கவில்லை என்றார்.
ஸ்வப்னாவின் இந்த புகார் கேரளாவில் பூதகரமாய் வெடித்துள்ளது. ஏற்கெனவே தங்கக்கடத்தல் தொடர்பாக பினராயிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் ஸ்வப்னாவின் இந்த புகார் மேலும் எதிர்க்கட்சியினரை உசுப்பியுள்ளது.
முன்னதாக, முதல்வர் பினராயி விஜயன் சார்பில் தனது நண்பரான ஷாஜ் கிரண் தன்னை மிரட்டியதாக ஸ்வப்னா கூறியிருந்தார். ஆனால் ஷாஜ் கிரண் அதை மறுத்திருந்தார். அப்போது ஷாஜ் கிரண் தன்னுடன் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்வப்னா சுரேஷ். அப்போது பேசிய அவர், "எனது வாக்குமூலத்தால் ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி கோபமாக இருபதாக ஷாஜ் கிரண் கூறியிருந்தார். அவர் கூறிய ஒன்றாம் நம்பர் வி.ஐ.பி முதல்வர் பினராயி விஜயன்தான். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சி.பி.எம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகியோர் பிலிவேழ்ஸ் சர்ச் மூலம் அமெரிக்காவில் ஃபண்ட்களை கொண்டு சேர்த்துள்ளனர். அதனால்தான் பிலிவேழ்ஸ் சர்ச்-க்கு எஃப்.சி.ஆர்.ஏ (பாரின் காண்ட்ரிபியூஷன் ரெகுலேசன் ஆக்ட்) ரத்துச் செய்யப்பட்டது என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாஜ் கிரண், "ஸ்வப்னா சுரேஷ் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். எடிட் செய்யாத ஆடியோவை நான் விரைவில் வெளியிடுவேன். எனக்கும் முதல்வருக்கும் சம்பந்தம் இல்லை" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்