கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து தமிழக வாலிபர் ஒருவர் கேரளா பெண்ணை திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 28 வயதான சிவசூரியன். இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர். மேலும், குஜராத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த சத்யன் என்பவரின் மகள் மணப்பெண் அஞ்சனா திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அஞ்சனா அகமதாபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். அஞ்சனாவும் சிவசூரியனும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். 


இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான சிவசூரியன் தனது திருமணத்திற்கு காரிலோ அல்லது பேருந்திலோ செல்லவில்லை. அதற்கு பதிலாக கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்தார். அப்போது அவர் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை சைக்கிளில் வைத்திருந்தார். அந்த பதாகைகளில் 'ரைட் டு மேரேஜ்'- கோயம்புத்தூர் டூ குருவாயூர்' என அச்சிடப்பட்டு இருந்தது. 


இதற்காக அவர் நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர்களும் சைக்கிளில் சென்றனர். கோவையில் இருந்து கோவைப்புதூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக குருவாயூருக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடைந்தார். கோவையில் இருந்து குருவாயூர் வரை 150 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணித்தார்.


புதுமாப்பிள்ளை சிவசூரியனுடன் அவரது நண்பர்களான அசோக் கிராமலிங்கம், தினேஷ் முருகேஷ், உஷா கண்ணன், மணிகண்ட கோவிந்தராஜ், நாசிகேட் வெங்கட் ஆகியோரும் சைக்கிளில் உடன் பயணம் செய்து வந்துள்ளனர். இவர்கள் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளர்களாக உள்ளனர். அவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக உள்ளனர். 


நேற்று காலை 10 மணிக்கு குருவாயூர் கோவிலில் வைத்து மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் சிவசூர்யா-அஞ்சனாவுக்கு திருமணம் நடந்தது. மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர். பின்னர் திருமணம் முடிந்த கையோடு சைக்கிளில் கோவை செல்வதாக சிவசூரியன் தெரிவித்துள்ளார். அதற்கு மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு, மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் காரில் கோவை வந்தடைந்தார்கள்.