கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள களமசேரியில் யெகோவாவின் மாநாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தது. இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில் பல பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், களமசேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட மத்திய இணை அமைச்சர் ராஜூவ் சந்திர சேகர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் உள்ள சைபர் செல்லுடன் இணையக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் புகாரின் பேரில் நேற்று அதிகாலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எஃப்ஐஆரில் பயன்படுத்தப்பட்ட பிரிவுகளில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 153 (கலவரத்தைத் தூண்டுவது) மற்றும் 153 ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 120 (ஓ)பொது ஒழுங்கு ஆகியவையின் கீழ் கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கேரள போலீஸ் பதிந்த எஃப்.ஐ.ஆர், “29.10.2023 அன்று எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் சந்திரசேகர், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கத்திலும், கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்திலும் 29.10.2023 முதல் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். "பாலஸ்தீன பயங்கரவாதக் குழு ஹமாஸ்" மற்றும் பிற ஆத்திரமூட்டும் அறிக்கைகள் பற்றிய வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, கேரளாவில் மதக் குழுக்களிடையே அமைதியின்மையை உருவாக்கி, அமைதியைக் குலைக்கும் வகையில் கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
மத்திய இணையமைச்சர் சந்திரசேகர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை கடந்த திங்கள்கிழமை பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் ஆட்சியில் தீவிர்வாத செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. கோழிக்கோட்டில் ரயிலை எரிக்கும் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் 200-300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்குமா, அந்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபி என்பது தெரியவரும் வரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சித்தரிக்கப்பட்டது. ஒரு திட்டமிட்ட பயங்கரவாத முயற்சி.” என தெரிவித்தார்.