கண்ணூர் ரயில் நிலையத்தில் குஜராத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தபோது, ’களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான்தான் காரணம்’ என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மாநாட்டு மையம் ஒன்றில் இன்று காலை யெகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், ஜெபக்கூட்டத்தை நடத்தி வந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வேளையில் மூன்று குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் கேரள போலீசார் மாநிலம் முழுவதும் பாதுக்காப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த மண்டபத்தின் உள்ளே டிபன் பாக்ஸ்களில் IED வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கொச்சியில் உள்ள மாநாட்டு மையத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கூறி ஒருவர் திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொடகரா போலீசார் அந்த நபரை கொச்சியில் இருந்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் விரிவான விசாரணைக்கு அழைத்து சென்றதாக கேரளா செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கொடகரா போலீசார் அந்த நபரின் அடையாளத்தை ரகசியமாக வைத்துள்ளனர். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதையும் போலீசார் உறுதி செய்ய சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர்.
கண்ணூர் போலீசார் சோதனையின்போது ஒருவரின் பையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்களை கண்டுபிடித்து கைது செய்தனர். கார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் மங்களூருவில் இருந்து அரீகோடு நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரது பையில் சோதனை மேற்கொண்டதில் சில ஆவணங்கள் மற்றும் படங்களை போலீசார் மீட்டுள்ளனர். சுமார் 15 நிமிடம் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்புக்கு பிறகு நேரில் சோதனை மேற்கொண்ட டிஜிபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ குண்டு வெடிப்புக்கு ஐஇடி கருவி பயன்படுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட இருக்கிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பரப்பி வருகின்றனர். போலியான செய்திகளை பரப்புபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றார்.
NIA புலனாய்வாளர்களின் முழு குழுவும் சம்பவ இடத்தில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த ஐஇடி வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்புக்கு சற்று முன்பு மையத்தில் இருந்து கார் ஒன்று வேகமாக வெளியேறும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. ஐஇடி வெடிகுண்டு வைத்த நபரே காரை ஓட்டியிருக்கலாம் என விசாரணைக் குழு சந்தேகிக்கின்றது.
பல குண்டுவெடிப்புகளுக்கு குறைந்த தீவிரம் கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு குண்டுவெடிப்பில் ஐஇடி பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தேசிய புலனாய்வு முகமை இந்த விசாரணையை மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை குண்டுவெடிப்பு நடந்த மண்டபத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். தடயவியல் குழுவினர், கைரேகை நிபுணர்கள், தீயணைப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் விரிவான ஆய்வு தற்போது நடந்து வருகிறது.