சமீப காலமாக, பொது சிவில் சட்டம் தொடர் பேசுபொருளாக மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்து. கடந்த மாதம், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என்றார்.


நடைமுறைக்கு வருகிறதா பொது சிவில் சட்டம்?


இந்த பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது. இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்ட ஆணையத்தின் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகனும் கடிதம் எழுதியிருந்தனர்.


பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மிசோரமை தொடர்ந்து கேரள சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மத்திய பாஜக அரசை கேரள மாநில அரசு கேட்டு கொண்டுள்ளது.  


கடந்த பிப்ரவரி மாதம்தான், மிசோரமில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசும், தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.


கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு:


கேரள சட்டப்பேரவை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ், சில திருத்தங்களை பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து, திருத்தப்பட்ட தீர்மானம் இறுதியாக நிறைவேற்றுப்பட்டது. அப்போது பேசிய பினராயி விஜயன், "சங்பரிவார் திட்டத்தின்படி கொண்டி வரப்பட்ட பொது சிவில் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இல்லை. 


மாறாக அது இந்து சட்ட நூலான 'மனுஸ்மிருதி'யை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை சங்பரிவாரம் வெகு காலத்திற்கு முன்பே தெளிவாக்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒன்றைச் செயல்படுத்த அவர்கள் முயற்சிக்கவில்லை. அப்படித் தவறாகப் புரிந்து கொள்ளத் தேவையில்லை.


முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ் மட்டுமே விவாகரத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு குற்றமாக்கியுள்ளது. ஆனால், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அல்லது ஒதுக்கப்பட்டவர்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பறிக்கும் ஒருதலைப்பட்சமான அவசரமான முடிவு என்பதால், பொது சிவில் சட்டத்தை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் மாநில சட்டசபை கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது.


அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, தனிப்பட்ட மத விதிகளைப் பின்பற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் உள்ள உரிமையை உள்ளடக்கியிருந்தால், அதைத் தடைசெய்யும் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பு உரிமையை மீறும் செயலாகும்" என்றார்.