பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், போதைப்பொருள் பாதிப்பிலிருந்து நமது இளைஞர்களைப் பாதுகாப்பதன் மூலம் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கை எந்த தளர்ச்சியும் இல்லாமல் தொடரும் என்று எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்:
ரூ.5,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை குஜராத் காவல்துறையினர் பறிமுதல் செய்தது உட்பட ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த தொடர் நடவடிக்கைகளுக்காக டெல்லி காவல் துறை அதிகாரிகளை அமித் ஷா பாராட்டினார்.
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான சமீபத்திய நடவடிக்கையாக டெல்லி காவல்துறை மற்றும் குஜராத் காவல்துறையின் சிறப்புப் பிரிவு, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, குஜராத்தின் அங்கலேஷ்வரில் 518 கிலோ கோகைனை பறிமுதல் செய்தது.
சர்வதேச சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட கோகைனின் மதிப்பு சுமார் ரூ.5,000 கோடி ஆகும். முன்னதாக, கடந்த அக்டோபர் 01ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மஹிபால்பூரில் உள்ள ஒரு கிடங்கில் சோதனை நடத்தி 562 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானாவை பறிமுதல் செய்தது.
டெல்லி போலீசுக்கு அமித் ஷா பாராட்டு:
விசாரணையின் போது, கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, டெல்லியின் ரமேஷ் நகரில் உள்ள ஒரு கடையில் இருந்து சுமார் 208 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், மீட்கப்பட்ட போதைப்பொருள் குஜராத்தின் அங்கலேஷ்வரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது.
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.