வறுமையில் வாடும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் முயற்சியாக இரண்டு இளைஞர்கள் நாடு தழுவிய மிதிவண்டி பயணத்தைத் தொடங்கியுள்ளனர். 1-ரூபாய் நிதியுதவியில், அடுத்தவர்களின் வாழ்கையை மாற்றியமையுங்கள்( Donate Rs 1, change somebody's life) என்ற கருப்பொருளை மையமாக வைத்து தங்கள் மிதிவண்டி ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.   


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த நிஜின், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 12 வருடங்களுக்கு முன்பாக, அலைபேசி கடை ஒன்றில் பணியாற்றி வரும் ரனீஷ் என்பதை சந்தித்திருக்கிறார். இருவரிடமும், தங்களால் இயன்ற சமூகப் பணிகளை செய்ய வேண்டும் என்ற உயரிய பார்வை இருந்ததால் சிறந்த நட்பை வளர்த்துக் கொண்டனர். மற்றவர்களைப் போல் இல்லாமல், தங்களை எண்ணங்களை உண்மையோடும், உளப்பூர்வமாகவும் முன்னெடுத்துச் செல்கின்ற போக்கு இருவரிடத்திலும் இருந்தது. 


இதற்கிடையே, இவர்களின் உன்னத நோக்கிப் புரிந்து கொண்ட ஜோஷி என்ற நபர், மிகவும் மலிவான விலையில் தன்னிடமிருந்த 20 சென்ட் நிலத்தை கொடுத்துள்ளார். மேலும், முழு பணத்தையும் செலுத்துவதற்கு முன்பாகவே, கட்டுமானப் பணிகளை தொடங்கவும் பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில், 20 சென்ட் நிலத்தில் விரைவில் தலா 600 சதுர அடியில் ஐந்து ஏழைகளுக்குச் சொந்த வீடு கட்டும் பணிகள் தொடங்கும் வகையில் நாடு தழுவிய மிதிவண்டி பயணத்தை, 2021 டிசம்பர் 10ம் தேதி அம்பலவயல் எனும் இடத்திலிருந்து தொடங்கினர். 


'Mission One Rupee' என்ற இவர்களது யூடுயுப் பக்கமும் பிரபலமடைந்து வருகிறது. வழி நெடுகிலும், கிராம மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வருகின்றனர். தாங்கள் சந்திக்கும் எந்தவொரு நபரிடமும் இவர்கள் கேட்டு வாங்கும் நிதியுதவி வெறும் 1ரூபாய் மட்டுமே. அவர்கள், பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் சரி! 


முன்னதாக, காசர்கோடு நகரை அடைந்த இவர்களை காசர்கோடு எம்பி ராஜ்மோகன் உன்னிதன் சந்தித்து பேசினார். அப்போது, இவர்களைப் பாராட்டி வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதத்தையும் அவர் வழங்கினார். ராகுல் காந்தி அந்த கடிதத்தில்," விளிம்புநிலை மாந்தர்களுக்கு வீடு கட்ட நிதி திரட்டும் உங்களின் உயரிய பார்வையை நான் வாழ்த்துகிறேன். உங்களது முயற்சி வெற்றியடைய எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களின் மனத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.  


சிறிய அளவிலான உதவியை நாம் குறைவாக மதிப்பிட்டு வருகிறோம்.  உங்களது செயல்பாடுகள், மானிடத்தின் உள்ளார்ந்த நற்குணத்தை ஈர்க்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 


தற்போது வரை 350 கி.மீக்கு மேல் பயணம் செய்த இவர்கள், ரூ. 2 லட்சம் வரை நிதியைப் பெற்றுள்ளனர். வீடுகள் கட்ட தேவையான நிதி கிடைத்தவுடன் தங்கள் மிதிவண்டி பயணத்தை நிறுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.