கேரளாவில் உள்ள உணவுக் கடையில் ஷவர்மாவை சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம் செருவத்தூரில் நடந்ததாகவும், இறந்த மாணவியின் பெயர் தேவானந்தா என கண்டறியப்பட்டுள்ளது. 


மேலும் அதே உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 18 மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பாக காசர்கோடு மருத்துவ அலுவலர் தெரிவிக்கையில்,  குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட டாக்டர்கள் குழுவினர் 11 வயது சிறுமி தேவானந்தாவை பரிசோதித்தும், அவரது உயிரை காப்பாற்றவும் எவ்வளவோ முயற்சி செய்தனர். இருப்பினும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றார். மேலும், சிகிச்சை பெற்றுவரும் 18 மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 





இதற்கிடையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டு சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தொடர்ந்து, திரிகரிபூர் எம்.எல்.ஏ எம்.ராஜகோபாலன் சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டியில் "கடை அடைக்கப்பட்டு சமையல்காரர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். உணவானது விஷமாக மாறியதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். சுகாதாரத்துறையினர் நிலைமையை கண்காணித்து இது குறித்து விசாரிக்க தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது," என தெரிவித்தார். மேலும், ஷவர்மாவின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் நேரில் பார்வையிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் தரமான உணவு வழங்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்றார்.






"உணவகங்களில் வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய அரசு மாநிலம் முழுவதும் ஆய்வுகளை நடத்தும்" என்று அமைச்சர் கூறினார்.


காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் சாப்பிட்ட ஷவர்மா கடை மாணவர்கள் படித்த டியூஷன் சென்டருக்கு அருகில் இருந்ததாகவும், இதனால் டியூஷன் முடிந்ததும் மாணவர்கள் அந்த கடையில் சாப்பிட்டபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண