ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கின் மரணம் இந்திய அளவில் பலதரப்பட்ட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம் சித்திக்கின் நெருங்கிய வட்டாரங்களும் அவரைப் பின்பற்றுபவர்களும் அவரது மரணத்துக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த அதே சமயம் மற்றொரு- பக்கத்தில் சிலர் அவரது மரணத்தை கர்மவினை எனக் குறிப்பிட்டு வெறுப்புப் பதிவுகளை அள்ளிவீசியிருந்தனர். சிலர் பதிவுகள் ஒருபடி மேலே போய் அவரது மரணத்தை இரக்கமின்றிக் கொண்டாடி இருந்தன. ரோஹிங்கியா அகதிகள் பிரச்னை, டெல்லி கலவரம், பெருந்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை மற்றும் இரண்டாம் அலை காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளைத் தனது கேமிராவில் பதிவு செய்ததற்காக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் டேனிஷ் சித்திக்.
இரண்டாம் அலை பெருந்தொற்று காலத்தில் டெல்லி இடுகாடுகளில் கூட்டாக எரிக்கப்படும் பிணங்களை ட்ரோன் வழியாகப் படம்பிடித்திருந்தார் டேனிஷ். அது சர்வதேசத்தை உறையச் செய்தது. நாட்டின் நிலைமையை உலகநாடுகளுக்கு எடுத்துச் சொன்னது. பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்ததும் இதையடுத்துத்தான். அவரது மரணம் குறித்த தகவல் வெளிவந்ததும் நிறையபேர் குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்கள் வெறுப்புப் பதிவுகளை பகிரத் தொடங்கினார்கள்.
அவர் எடுத்த ட்ரோன் புகைப்படமும் அவரது இறந்த உடல் புகைப்படமும் கொலாஜ் செய்யப்பட்டு அவர்களால் வாட்சப்பில் பகிரப்பட்டன. அதனை ட்ரோன் புகைப்படம் எடுத்ததன் ’கர்மா’ என அவர்கள் வசைபாடியிருந்தார்கள். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான ஸ்ரீராஜ் நாயர் தனது ட்வீட்டில்,’’டேனிஷ் சித்திக் மரணமடைந்ததாகக் கேள்விப்பட்டேன். தான் ட்ரோன் வழியாக எரியூட்டப்படும் பிணங்களைப் புகைப்படம் எடுத்து மேற்கு ஊடகங்களுக்கு விற்றதன் வழியாகவே நிறைய சம்பாதித்தவர்.தற்போது அவர் இறந்த உடலின் புகைப்படம் மீடியாவில் வைரலாகிவருகிறது. இறுதியில் கர்மாதான் வெற்றிபெறும்’ என ட்வீட் செய்திருந்தார்.
க்ரியேட்லி என்னும் வலதுசாரி ட்வீட்டர் பக்கத்தில், ‘டேனிஷின் இறுதிச்சடங்கில் எந்தவித ட்ரோனும் பறக்கக் கூடாது என்றும் அவரது குடும்பத்தினருக்கு துக்கம் அனுசரிக்கத் தேவையான தனிமை கிடைக்கட்டும் என்றும் நாங்கள் பிரார்த்தித்துக் கொள்கிறோம்’ எனப் பதிவிட்டிருந்தார்கள்.
டேனிஷ் சித்திக்குக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருந்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் பதிவை வலதுசாரி ஆதரவாளர்கள் பகடி செய்திருந்தார்கள்.
இதுபோன்ற ட்வீட்களுக்கு ஒமர் அப்துல்லா, பர்க்கா தத் உள்ளிட்ட பலர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.