கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாடில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள சுமார் 20,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அக்டோபர் 27 (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. ஹரிபாடில் உள்ள வழுதானம் படிஞ்சார மற்றும் வழுதானம் வடக்கு ஆகிய பகுதிகளில் இறந்த வாத்துகளில் காய்ச்சல் கண்டறியப்பட்டது. மேலும் வாத்துகளில் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் எச்5என்1 துணை வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தெரிவித்துள்ளார்.


பரிசோதனையில் கண்டுபிடிப்பு


அறிக்கைகளின்படி, கடந்த வாரத்தில் காய்ச்சலால் சுமார் 1,500 வாத்துகளை விவசாயிகள் இழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இறந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவுகள் பறவைக் காய்ச்சல் இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



20,000 வாத்துக்கள் அழிப்பு


செய்தியாளர்களிடம் பேசிய கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் பிந்து, "சுமார் 20,000 வாத்துகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும், "எட்டு விரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, வியாழக்கிழமை காலை அழிக்கும் பணிகளைத் தொடங்குவோம்," என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஹாட்ஸ்பாட் பகுதியில் இருந்து பறவைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு கலெக்டர் தடை விதித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: லட்சுமி, விநாயகர் வேண்டாம்....ரூபாய் நோட்டில் மோடி படத்தை அச்சிடுங்கள்... ஃபோட்டோஷாப் புகைப்படத்துடன் பாஜக எம்எல்ஏ ட்வீட்!


முந்தைய சம்பவங்கள்


கேரளாவில் தொடர்ச்சியாக வாத்துகள் பறவைக் காய்ச்சலுக்கு உள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. கேரளாவில் ஆலப்புழா சுற்றி உள்ள மாவட்டங்களில் வாத்து ஒரு முக்கியமான இறைச்சிகளில் ஒன்றாக உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களை உள்ளடக்கிய குட்டநாட்டில் உள்ள தகழி ஊராட்சியைச் சேர்ந்த பறவைக் கூட்டங்களில் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதற்கு முன், ஜூலை மாதத்தில், கோழிக்கோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன, காய்ச்சலால் 300 பறவைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.



மனிதர்களுக்கு பாதிப்பில்லை


மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (H5N1) அல்லது H5N8 பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது, தொற்று எச்சங்கள், உமிழ்நீர் மற்றும் பறவைகளின் சுரப்பு மூலம் இது பரவுகிறது. இருப்பினும், H5N8 வைரஸால் மனிதர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. 2016 ஆம் ஆண்டு அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு (WHO) "இன்று வரை, இன்ஃப்ளூயன்ஸா A(H5N8) நோய்த்தொற்று ஏற்பட்ட மனிதர்கள் எதுவும் கண்டறியப்படவில்லை" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.