பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் பரத் பூஷண், தன் மனைவி சுஜாதா மற்றும் 3 வயது மகன் கண் முன்னால், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை, ’நீ இந்துவா என்று பயங்கரவாதிகள் கேட்டுவிட்டுக் கொலை செய்ததாக’ அவரின் மாமியார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர். 

கீழே விழும் வரை சுட்டுக்கொண்டே இருந்த பயங்கரவாதிகள் 

இந்த துயர சம்பவத்தில், பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் பரத் பூஷண் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள், மரணம் அடைந்து கீழே விழும் வரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொண்டே இருந்துள்ளனர்.

நீ இந்துவா?

இதுகுறித்து பரத் பூஷணின் மாமியார் ஊடகக்ங்களிடம் பேசினார். அவர் கூறும்போது, "நீ இந்துவா என்று தீவிரவாதிகள் கேட்டதாகத் தெரிகிறது, பின்னர் சுற்றுலாப் பயணிகளை நோக்கிச் சுட்டனர், அவர்கள் இந்துக்கள் என்பதால் சுடப்பட்டனர். என் மருமகனையும் சுட்டனர்... அதே நேரத்தில் தீவிரவாதிகள் பெண்களையும் குழந்தைகளையும் சுடவில்லை, ஆனால் ஆண்களின் தலையில் சுட்டனர். அவர்கள் கீழே விழும் வரை சுட்டுக் கொண்டே இருந்தனர்.

என் மகள் ஒரு மருத்துவர். அவள் கணவர் இறந்துவிட்டதை உணர்ந்தாள். நாங்கள் மதியம் 2.45 மணிக்கு அவளிடம் பேசினோம். இந்திய ராணுவம் அவளை பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கிறது" என்று தெரிவித்தார்.

பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வரி சூர்யா பதிவு

இதுகுறித்து பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வரி சூர்யா கூறும்போது, ’’சுஜாதாவுடன் பேசினேன். அவரும் குழந்தையும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் உள்ளூர் நிர்வாகத்திடம் பேசினேன்’’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் மஞ்சுநாத் என்னும் தொழிலதிபரும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாம்: Pahalgam Attack: ’’உன்னை கொல்லல; போய் மோடிகிட்ட சொல்லு!’’- கணவனைக் கொன்று மனைவியிடம் சொன்ன பஹல்காம் தீவிரவாதி!