ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மனைவி கண் முன்னாலேயே ஏராளமான கணவன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
28 பேர் பலியான சோகம்
கர்நாடக மாநிலம், சிவமோகா பகுதியைச் சேர்ந்த தம்பதி மஞ்சுநாத்- பல்லவி. இவர்கள் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தங்களின் மகன் அபிஜேயாவுடன் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில், 28 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 20 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
அங்கு நடந்த சம்பவம் குறித்து பல்லவி, கன்னட ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்ததாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் பல்லவி கூறியிருப்பதாவது:
’’நாங்கள் மூவரும் பஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களைப் போலவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக புதுமணத் தம்பதியினர் அங்கு இருந்தனர். நாங்கள் பஹல்காமில் இருந்தோம். அப்போது என் கண் முன்னாலேயே என் கணவன் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னால் அதற்கு எதிர்வினை ஆற்றவோ, அழவோகூட முடியவில்லை.
உன்னைக் கொல்ல மாட்டேன். போ.. போய் மோடியிடம் சொல்
அங்கு 3 முதல் 4 தீவிரவாதிகள் இருந்ததைக் கண்டேன். என் கணவன் கொல்லப்பட்டதைப் பார்த்தது, அங்கிருந்த தீவிரவாதியிடம், ’’என் கணவனைக் கொன்றுவிட்டாய். என்னையும் கொன்று விடு’’ என்றேன். என் மகனும், ’’நாயே என் அப்பாவைக் கொன்றுவிட்டாய். எங்களையும் கொலை செய்துவிடு’’ என்று கதறினான்.
அப்போது அந்தத் தீவிரவாதி, ’’உன்னைக் கொல்ல மாட்டேன். போ.. போய் மோடியிடம் சொல்’’ என்று தெரிவித்தான்.
ஆண்களையே குறிவைத்துக் கொலை
அவர்கள் ராணுவ உடை எதையும் அணியவில்லை. ஆண்களையே குறிவைத்துக் கொலை செய்தனர். குறிப்பாக இந்துக்களைக் குறிவைத்து சுட்டனர்.
என்னுடைய சொந்த ஊரான சிவமோகாவுக்கு நான் திரும்பச் செல்ல வேண்டும். ஆனால் தனியாக அல்ல. என் கணவரின் உடலுடன்தான் ஊர் திரும்புவேன். 3 பேரும் ஒன்றாக வந்தோம். ஒன்றாகத்தான் திரும்பிச் செல்லுவோம். அதிகாரிகள் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’’ என்று பல்லவி கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
மஞ்சுநாத் ரியல் எஸ்டேட் முகவரியாக இருந்தவர், அவரின் மனைவி வங்கி மேலாளராகப் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.