காஷ்மீரின் கிஷ்த்துவார் மாவட்டத்தில், நேற்று பெரும் மேக வெடிப்பால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 38-ஆக இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பலர் மாயமாகியுள்ளனர். இந்த திடீர் வெள்ளத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 60 -ஆக உயர்வு

கிஷ்த்வார் மாவட்டத்தின் சிசோட்டி கிராமத்தில் வியாழக்கிழமையான நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் 21 உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 38 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வருடாந்திர மச்சைல் மாதா யாத்திரைக்கான அடிப்படை முகாமாக செயல்படும் சிசோட்டியில், நேற்று மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த சம்பவம் நடந்தபோது, ஏராளமான யாத்ரீகர்கள் அங்கு இருந்தனர். வெள்ளம், மண்சரிவுகள் மற்றும் இடிபாடுகள் பாய்ந்து, வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களை மண்ணோடு மண்ணாக புதைத்தது. இதில் பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்த திடீர் வெள்ளத்தில் ஒரு பாதுகாப்பு முகாம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளம் தொடர்பாக வெளியான வீடியோக்கள்

திடீர் வெள்ளம் ஏற்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளியில், வெள்ளத்திற்குப் பிறகு சிதறிக் கிடந்த பொருட்கள் காட்டப்பட்டுள்ளன.

மேக வெடிப்பைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் அந்தப் பகுதிக்குள் நுழைந்த தருணத்தை காட்டும் மற்றொரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மிகப் பெரிய மேக வெடிப்பால் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பலர் மாயமாகியுள்ளதால், எலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.