லக்னோ சிறையில் உள்ள சுமார் 50 பெண் கைதிகள் ‘கர்வா சௌத்’ தினத்தை முன்னிட்டு இன்று விரதம் மேற்கொண்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.


கர்வா சௌத் விரதம்


தங்கள் வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியத்துக்காக ஆண்டுதோறூம் வட இந்தியாவில் பெண்கள் கடைபிடிக்கும் விரதம் கர்வா சௌத். பாகிஸ்தானிலும் இந்த விரதத்தை அதிகம் கடைபிடிக்கின்றனர்.


இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியன் உதயமாகும் முன்பிருந்து மாலை சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோன்பு இருப்பர். சந்திரன் முன்பு தங்கள் விரதத்தைக் கலைத்து உணவு உட்கொள்கின்றனர். இன்றும் நாளையும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


இத்தகைய சூழலில் திருமணமான பெண் கைதிகள் கர்வா சௌத் விரதம் அனுசரிக்கவும் இப்பண்டிகையுடன் தொடர்புடைய அனைத்து சடங்குகளையும் செய்யவும் முன்னதாக உத்தரபிரதேச சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.


50 கைதிகள் விரதம்


இதனையடுத்து, லக்னோ சிறையில் சுமார் 50 பெண் கைதிகள் கர்வா சவுத் விரதம் இருந்து சடங்குகளில் ஈடுபட்டுள்ளனர்.


இது குறித்து சிறை நிர்வாகத்தின் கூற்றுப்படி, திருமணமான பெண் கைதிகளில், 10 கைதிகள் சிறையில் தங்கள் முதல் கர்வா சவுத்தை கொண்டாடுகிறார்கள்.


பெண் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு பூஜை பொருள்கள் மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பவும் சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்காணிப்பின் கீழ் விரதம்


மூத்த சிறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி கூறுகையில், “இந்தப் பெண்கள் அனைத்து சடங்குகளையும் எங்கள் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சுமார் அரை டஜன் பெண் கைதிகளின் கணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புனித நாளில் அவர்கள் தங்கள் மனைவிகளை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.


பெண் கைதிகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.


திருமணமான பெண்கள், சந்திரனைப் பார்த்த பிறகு நடத்தப்படும் பூஜைக்காக தங்கள் சிறைக்கு வெளியே ஒரு வட்டத்தில் உட்கார அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கணவரைக் கொலை செய்த பெண்கள் விரதம்


இதனிடையே கோரக்பூரில், மாவட்ட சிறையில் உள்ள சுமார் 12 பெண் கைதிகள் இன்று கர்வா சௌத் விரதத்தை கடைபிடித்தனர். 


சுவாரஸ்யமாக, கணவர் கொலையில் தொடர்புடைய இரண்டு பெண் கைதிகளும் இந்த விரதத்தைக் கடைபிடித்துள்ளனர்.


காதலனின் துணையுடன் தனது சகோதரனைக் கொன்ற குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லீம் பெண் ஒருவரும் விரதம் இருந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


 






முன்னதாக பாலிவுட் நடிகைகள் ரவீனா டாண்டன், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் நடிகர் அனில் கபூர் வீட்டுக்கு வந்து கர்வா சௌத் விரத விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிக லைக்குகளைப் பெற்று வருகின்றன.