கர்நாடக காங்கிரசில் தலைமை பதவிக்கான அதிகாரப் போட்டி முற்றியுள்ளது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை வெளிப்படையாகக் கடுமையாக விமர்சித்தார். சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மேலிடத்தை "சொன்னது போல் நடந்து கொள்ளுங்கள்" என்று நினைவூட்டும் வகையில் ஒரு பதிவை சிவகுமார் வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, முதல்வர் சித்தராமையாவும், "சொல் விளையாட்டு" மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
டி.கே. சிவகுமாரின் பதிவு என்ன.?
இன்று முன்னதாக, தனது எக்ஸ் தளத்தி பதிவு ஒன்றை போட்ட துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், "சொல் சக்தி உலக சக்தி. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது ஒரு நீதிபதியாக இருந்தாலும் சரி, அதிபராக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும். வார்த்தை சக்தி உலக சக்தி." என்று பதிவிட்டார்.
2023-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கான "ரகசிய ஒப்பந்தத்தின்" ஒரு பகுதியாக, தலைமைப் பதவியை அடைய முயற்சிக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், கட்சித் தலைமை அப்போது அளித்த உறுதிமொழியை சித்தராமையா நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.
சித்தராமையாவின் பதில் பதிவு
தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று அடிக்கடி கூறி வரும் சித்தராமையா, டி.கே. சிவகுமாரின் பதிவிற்கு ஒரு சுவாரஸ்யமான பதிலை கூறியுள்ளார். டி.கே. சிவகுமாரின் வார்த்தைகளை வைத்தே அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "ஒரு வார்த்தை உலக மக்களுக்கு நன்மை பயக்காவிட்டால் அது சக்தியல்ல. கர்நாடக மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒரு கணம் அல்ல, மாறாக ஐந்து முழு ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு. நான் உட்பட காங்கிரஸ் கட்சி , நமது மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் நடந்து வருகிறது. கர்நாடகாவிற்கு எங்கள் வார்த்தை ஒரு முழக்கம் அல்ல, அது எங்களுக்கு உலகத்தை குறிக்கிறது" என்று சித்தராமையா பதிலளித்துள்ளார். மேலும், தனது இரண்டு பதவிக்காலத்தில் முதலமைச்சராக நிறைவேற்றிய வாக்குறுதிகளை சித்தராமையா பட்டியலிட்டுள்ளார்.
இரண்டு உயர்மட்ட மாநிலத் தலைவர்களுக்கு இடையேயான இந்த வெளிப்படையான சமூக ஊடக "வார்த்தை"ப் போர், அவர்களின் அணுகுமுறையில் ஒரு திட்டவட்டமான மாற்றத்தைக் குறிக்கிறது. இதுவரை, இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், சித்தராமையா முதலமைச்சராக இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், டி.கே. சிவகுமார் தெளிவாக தனது முன்னெடுப்பை அதிகரித்துள்ளார். ஆனால், பந்து தற்போது காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் கையில் தான் உள்ளது.