கர்நாடகாவில் கணவரால் கொல்லப்பட்ட மனைவி உயிரோடு வந்த சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. கொலை வழக்கு ஒன்றில் பயங்கர திருப்பமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பெண், ஹோட்டலுக்கு உயிரோடு சென்றுள்ளார். இதையடுத்து, கொலை வழக்கின் விசாரணையில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட மனைவி உயிரோடு வந்தது எப்படி?

குடகு மாவட்டம் குஷால்நகரை சேர்ந்தவர் மல்லிகா. இவர் காணாமல் போனதாக 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் சுரேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் பயங்கர திருப்பமாக  பெட்டதரபுராவில் மனித எலும்புக்கூடுகளை போலீசார் கண்டெடுத்தனர்.

எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, அவை மல்லிகாவின் எலும்புக்கூடுகள் என காவல்துறை உறுதிசெய்து, கணவர் சுரேஷ்தான் கொலை செய்தார் என்ற முடிவுக்கு வந்தது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டில் 18 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் மற்றுமொரு திருப்பமாக மல்லிகா உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஷின் நண்பர், மல்லிகாவை உயிரோடு பார்த்துள்ளார்.

அமானுஷ்யமா? காவல்துறை அஜாக்கிரதையா?

மடிகேரியில் உள்ள உணவகம் ஒன்றில் வேறொரு நபருடன் அவர் உணவு உண்பதை சுரேஷின் நணபர் பார்த்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திலேயே மல்லிகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை காவல்துறை கையாண்ட விதம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட நீதிமன்றம், ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை முடிவுகளை பெறுவதற்கு முன்பே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது உட்பட வெளிப்படையாகவே பல குளறுபடிகள் நடந்திருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

குறிப்பாக, காவல்துறை கண்டெடுத்த எலும்புக்கூடுகளையும் மல்லிகா குடும்பத்தினரின் டிஎன்ஏவையும் பொருத்தி பார்த்ததில் இரண்டும் வெவ்வேறு என பின்னர் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுரேஷின் வழக்கறிஞர் கூறுகையில், "குஷால்நகரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், தனது மனைவி காணாமல் போனது குறித்து 2020 ஆம் ஆண்டு குஷால்நகர் கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே நேரத்தில், பெட்டதரபுரா காவல் நிலைய எல்லைக்குள் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, தகாத உறவின் காரணமாக தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி, பெட்டதரபுரா போலீசார் சுரேஷை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்போது, ​​அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரித்தபோது, ​​அவர் வேறொருவரை மணந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். சுரேஷுக்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்று அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். மடிகேரியிலிருந்து 25-30 கி.மீ தொலைவில் உள்ள ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் அவர் வசித்து வந்துள்ளார். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை" என்றார்.