கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடுப்பி, குந்தாப்பூர் பியுசி கல்லூரியில் முஸ்லிம் மாணவிகளுக்கு, வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கடந்த வாரம் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் வாயிற்கதவுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மத ரீதியான அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றுகூறி பந்தார்கர் கல்லூரி ஆண் மாணவர்கள், இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் கழுத்தில் காவி நிறத் துண்டை அணிந்தும், இந்து மாணவிகளும் கழுத்தில் காவி வண்ணத் துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.






தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பிப்.8 அன்று தனி நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,கல்வி நிலையங்களை மீண்டும் திறக்குமாறும் அனைத்து மாணவர்களும் காவித் துண்டுகள், ஷால்கள், ஹிஜாப் மற்றும் பிற மதச் சின்னங்களை வகுப்புக்குள் அணிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. 


இந்தநிலையில், கர்நாடகாவில் இந்த விவகாரத்திற்கு பிறகு சில பள்ளி மாணவர்கள் (இன்று) திங்கள்கிழமை காலை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாப்களை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் நேரடியாக தலையிட்டு அறிவுறுத்தியது. அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 






கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அரசு நடத்தும் பள்ளியின் வாசலில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவர்களை ஆசிரியர் ஒருவர் நிறுத்தி, "அதை அகற்று, அதை அகற்று" என்று உத்தரவிட்டார். சில பெற்றோர்கள் இதை எதிர்த்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டதும் அந்த வீடியோவில் உள்ளது. அந்தவிவாதத்திற்குப் பிறகு, பெண்கள் ஹிஜாபைக் கழற்றி பள்ளிக்குள் நுழைந்தது பதிவாகியுள்ளது. 


முஸ்லீம் மாணவர்கள் வகுப்புகளின் போது ஹிஜாப் அணியக் கூடாது என்ற சர்ச்சைக்கு மத்தியில் கர்நாடகா பள்ளிகள் (10 ஆம் வகுப்பு வரை) இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண