கடந்த சில ஆண்டுகளாகவே, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, இம்மாதிரியான சம்பவங்களில் ஈடுபடுவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இஸ்லாமிய மாணவனை அறைய சொன்ன உ.பி. ஆசிரியை:
சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு, இஸ்லாமிய மாணவனை ஆசிரியை அறையச் சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இஸ்லாமிய மாணவனை அறையும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர் உத்தரவிடுவது பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி ஒன்றில் இஸ்லாமிய மாணவர்களைப் பார்த்து, பாகிஸ்தானுக்கு செல்லும்படி ஆசிரியை ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிவமோகாவில் உள்ள அரசுப் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திப்பு நகரில் அமைந்துள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களிடம் ஆசிரியை மஞ்சுளா தேவி இவ்வாறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"இது இந்துக்களின் தேசம்.. பாகிஸ்தானுக்கு போங்க"
சிவமொக்கா நகரை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் நிர்வாகி நஸ்ருல்லாஹ் அளித்த புகாரின் பேரில், ஆசிரியை மஞ்சுளா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவமோகா பொதுக்கல்வித்துறை துணை இயக்குநர் பரமேஸ்வரப்பா கூறுகையில், "துறை ரீதியான விசாரணை நிலுவையில் உள்ளதால் ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக எங்களுக்கு வியாழக்கிழமை புகார் வந்தது. மண்டல கல்வி அதிகாரியின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வகுப்பில் மாணவர்கள் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதாலும், மதிக்காததாலும் மாணவர்களை நெறிப்படுத்த அப்படி செய்தேன் என முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் விளக்கம் அளித்தார்.
நடந்தது என்ன?
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரில், "இரண்டு மாணவர்களை ஆசிரியை மஞ்சுளா திட்டியுள்ளார். இந்தியா அவர்களின் நாடு அல்ல. இது இந்துக்களின் நாடு. நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என ஆசிரியை கூறியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் உள்ளூர் தலைவர்களிடம் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மண்டல கல்வி அதிகாரி முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை உருதுப் பள்ளியில் எட்டு ஆண்டுகளாக கற்பித்து வந்துள்ளார். அவர் மொத்தம் 26 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.