பெங்களூருவின் மணிபால் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) பேராசிரியர் ஒரு முஸ்லிம் மாணவரை வகுப்பின் போது 'பயங்கரவாதி' என்று குறிப்பிட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அந்த மாணவருடன் படிக்கும் சக மாணவர்களால் எடுக்கப்பட்ட வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் கல்வி நிறுவனத்தில் கடந்த 26ம் தேதி வெள்ளிக்கிழமை வகுப்பறை ஒன்றில் பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பேராசிரியர் மாணவரின் இஸ்லாம் மதத்தை சுட்டிக்காட்டியும், பயங்கரவாதி என்று கூறியுள்ளார். 


இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இஸ்லாம் மாணவர் கோபமடைந்து என்னை எப்படி நீங்கள் பயங்கரவாதி என சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இது வாக்குவாதமாக மாறியுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில், மாணவரிடம் அந்த பேராசிரியர் விளையாட்டாகதான் சொன்னென் என்று மன்னிப்பு கேட்டார். 






தனக்கான நியாயத்தை பெற நினைத்த மாணவர் மீண்டும் என்னை பார்த்து எப்படி நீங்கள் அப்படி சொல்லலாம். இது வேடிக்கையான விஷயமோ, விளையாட்டான விஷயமோ அல்ல. இந்த நாட்டில் முஸ்லீமாக இருந்து இதுபோன்ற விஷயங்களை தினந்தோறும் எதிர்கொள்கிறோம். இது வேடிக்கையான விஷயமல்ல. 


அதற்கு அந்த பேராசிரியர் மாணவரிடம், ”நீயும் என் மகன் போன்றவன்” என்று கூறினார். பதிலளித்த மாணவர் ” வகுப்பறையில் அனைவரது முன்னிலையிலும் உங்களது மகனை பயங்கரவாதி என்றுதான் அழைப்பீர்களா..? இது ஒரு வகுப்பு, நீ தொழில்முறை பேராசிரியர்.  நீங்கள் சொல்லி தருவதைதான் நாங்கள் கற்பிக்கிறோம். இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள்” என்று மாணவர் கூறியதுடன் வீடியோ முடிவடைகிறது. 


இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மாணவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, எம்.ஐ.டி பேராசிரியரை பணி இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. மாணவருக்கும், பேராசிரியருக்கும் இடையே எப்படி உரையாடல் தொடங்கியது என்பது குறித்த முதற்கட்ட தகவல்களை கல்லூரி வெளியிடவில்லை. 


இருப்பினும், கல்லூரி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போதிலும், அவர் மீது சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகிறது. வகுப்பறையில் மத அரசியலை திணிக்கும் இதுபோன்ற பேராசிரியர்களுக்கு தண்டனை அளிப்பதால், மற்றவர்கள் இது பாடமாக அமையும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 


இந்தநிலையில், பேராசிரியர் மீதான குற்றத்தை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நிரூபணம் ஆகும் பட்சத்தில் பேராசியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பேராசிரியர் மீது தான் எந்தவித புகாரும் வழங்கப்போவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.