கர்நாடக மாநிலத்தில் லஞ்ச புகார் அளித்த ஒப்பந்ததாரர் ஒருவரின் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்ட அமைச்சர் ஈஸ்வரப்பா தன் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல். இவரிடம் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்டதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தார், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈட்டுபட்டனர். இதனால் சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஈஸ்வரப்பா, அவரது உதவியாளர்கள் ரமேஷ், பசவராஜ் ஆகியோர் மீது உடுப்பி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, ஈஸ்வரப்பாவை பதவியில் இருந்து நீக்க மனு அளித்திருக்கின்றனர்.
அதேவேளையில், ஈஸ்வரப்பாவுக்கு பாஜக சார்பிலும், பதவியை விட்டு விலகுமாறு எதிர்ப்புகள் எழுந்தன. அவரால் கட்சிக்கு ஊழல் குற்றச்சாட்டில் அவப்பெயர் ஏற்படுவதாக பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் இருக்க ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் ஈஸ்வரப்பா, " எனக்கும், சந்தோஷ் பாட்டீலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் காங்கிரஸார் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை என விரைவில் நிரூபிப்பேன். அதுவரை அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்க முடிவெடுத்துள்ளேன். நான் இந்த அளவிற்கு உயர, என்னை வளர்த்தெடுத்த கட்சிக்கும், எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் என்னால் எவ்வித இடைஞ்சலும் ஏற்பட விரும்பவில்லை. கட்சி நலனை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருக்கிறேன்" என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை(Basavaraj Bommai) கூறுகையில், "பிரேதப் பரிசோதனை முடிந்து சந்தோஷ் பாட்டீலின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எத்தகைய தலையீடும் இல்லாமல் முறையான விசாரணை நடைபெறும்" என்றார்.
மேலும், சந்தோஷ் பாட்டீல் ஒப்பந்ததாரராக பணி செய்ததற்கு ரூ.4 கோடி தொகையை கேட்டுள்ளார். அதற்கு ஈஸ்வரப்பா வேலை செய்ததற்கான தொகையை வழங்க 40% கமிசன் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, வேலைக்கான ஒப்பந்தம் என்ற பெயரில் ஏதும் கையெழுத்தாகவில்லை. சந்தோஷ் பாட்டீலுக்கு வாய் வழியாகதான் வேலைக்கான தகவல் சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. அவர் வேலை செய்ய தொடங்கி 18 மாதங்கள் ஆனபோது, அதற்கான சம்பளம் என்று எதையும் சந்தோஷ் பாட்டீல் பெறவில்லை. அமைச்சர் ஈஸ்வரப்பாவும் வேலை தொடர்பான எழுத்துப் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்