அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை காரணமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும், சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், அவரின் எம்.பி. பதவி திருப்பி வழங்கப்பட்டது.


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுக்கு செக்:


இந்த நிலையில், மற்றொரு எம்.பியின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. அது வேறும் யாரும் அல்ல, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர்தான், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஒரே மக்களை உறுப்பினர்.


கடந்த தேர்தலில் மோசடி செய்ததாகக் கூறி, ரேவண்ணாவின் எம்.பி. பதவியை கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாக பறித்துள்ளது. ரேவண்ணாவுக்கு பதிலாக தன்னை வெற்றிபெற்றவராக அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மஞ்சு, மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு:


மஞ்சுவும் மோசடியில் ஈடுபட்டதால் அவரை வெற்றிபெற்றவராக அறிவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மஞ்சுவும் ஹாசன் தொகுதி வாக்காளருமான தேவராஜகவுடா தொடர்ந்த வழக்கில் நீதிபதி கே. நடராஜன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தீர்ப்பின் விரிவான உத்தரவு நகல் இன்னும் நீதிமன்றத்தால் வெளியிடப்படவில்லை.


கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி, இந்த விவகாரத்தில், மஞ்சு தாக்கல் செய்த மனவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. மனு தாக்கல் செய்தபோது, கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டிய பிரமாண பத்திரத்தை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.


மோசடியில் ஈடுபட்டாரா தேவகவுடாவின் பேரன்?


அதேபோல, கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி  31ஆம் தேதி, மனு தாக்கல் செய்யும் போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேவராஜகவுடாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மஞ்சு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், இந்த மனுக்களை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம், இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் ஓர் பகுதியாக, மனுதாரர்கள் மற்றும் ரேவண்ணாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.