18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ளன. தடுப்பூசியின் விலையை உயர்த்திய பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு என பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், கொரோனா இரண்டாவது அலையை வெல்லவேண்டும் என்றால், அதற்கு உங்களின் ஒத்துழைப்பு முழுமையாக வேண்டும் என்று நாட்டு மக்களிடம் அறிவுறுத்தினார்.




இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.59 லட்சம், நேற்று 2.95  லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.14  லட்சமாக உயர்ந்தது.


நாட்டில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் சுகாதாராப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும்  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மே 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சில தினங்களுக்கு மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் மருந்து நிறுவனங்களிடமிருந்து மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.


இந்தியாவில் கோவாக்‌சின் மற்றும் கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அரசு மருத்துவனையில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் 250 ரூபாய்க்கும் செலுத்தப்படுகிறது.  கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் நேற்று தடுப்பூசியின் விலை அறிவித்தது. அதில், மாநில அரசுக்கு 400 ரூபாய்க்கும், தனியாருக்கு 600 ரூபாய்க்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு அதே 150 ரூபாய்க்கு தொடர்ந்து அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.




கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், இந்த உயர்வு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் கேரளா, சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் விலையேற்ற அறிவிப்புக்கு பிறகு, தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.