கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி, அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. 1989ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், மேலும் 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.


காங்கிரஸ் வெற்றிக்கு காரணமான லிங்காயத் சமூகத்தினர்:


பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், காங்கிரஸ் வெற்றி பெறும், ஆனால், பெரிய வெற்றியாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது. சில கருத்துக்கணிப்பு முடிவுகள், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அதை எல்லாம் பொய்யாக்கும் விதமாக இன்றைய தேர்தல் முடிவு அமைந்துள்ளது.


காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்கு மிக முக்கிய காரணம் லிங்காயத் சமூகத்தினர். கர்நாடகாவில் அரசியல் ரீதியாகவும் எண்ணிக்கையின் ரீதியாகவும் செல்வாக்கு மிக்க சாதி பிரிவான லிங்காயத்தினர், பாரம்பரியமாக, பாஜகவுக்கு வாக்களித்து வந்தனர்.


கர்நாடக மக்கள் தொகையில் 17 சதவிகிதம் உள்ள லிங்காயத்தினர், 78 தொகுதிகளின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர். இந்த 78 தொகுதிகளில் 54 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பாஜகவின் செல்வாக்கு மிக்க லிங்காயத் தலைவர்கள், காங்கிரஸ்-க்கு கட்சி மாறியது.


அப்செட்டான ஜெகதீஷ் ஷெட்டர்:


அதில் ஒருவர், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வென்ற இவர், மொத்தம் ஆறு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.


இந்த தேர்தலில் நான்காவது முறையாக ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் களம் கண்டார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனால், பாஜக வேட்பாளரான மகேஷ் தேங்கிங்கையிடம் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது அவருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.


அடுத்த முதலமைச்சர் யார்?


இதற்கிடையே, ஆட்சி அமைக்கும்  முனைப்பில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வரும் நிலையில், சித்தராமையாவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதுதான், தன்னுடைய கடைசி தேர்தல் என சித்தராமையா அறிவித்துவிட்டதால் அவருக்கு முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


அதேபோல, பொதுத் தேர்தலின்போது, கர்நாடகம் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் தேர்தல் வியூகம் அமைக்க டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் தேவைப்படுவதால், தேர்தலுக்கு பிறகு, இரண்டரை ஆண்டுகளுக்கு அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.