தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக ஊடகத்தினரை எச்சரிக்கும் வகையில் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த  TTF வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு  சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டனர். இணையத்தில் சரமாரியாக டிடிஎஃப் வாசன் மீது விமர்சனம் எழுந்தது. 






இவரது பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட டிடிஎஃப் வாசன், தான் பயிற்சி எடுத்துக் கொண்டே இத்தகைய ஸ்டண்டுகளில் ஈடுபடுவதாகவும், அதிவேகமாக பைக் ஓட்டியதாக சொல்லப்பட்ட வீடியோ ஜமுனா ஹைவேஸ் சாலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 


சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான  ஜி.பி.முத்துவை சந்தித்த TTF வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் TTF வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. 






சாலை விதிகளை மீறும் TTF வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு இணையவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து  போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளிலும்,  சூலூர் காவல் நிலையத்திலும் 3 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டிடிஎப் வாசன் மதுக்கரை நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். 


இந்நிலையில் TTF வாசன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் ஊடகத்தினரை எச்சரிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த வீடியோவில் TTF பவர் தெரியாம நியூஸ் சேனல்கள் விளையாடிகிட்டு இருக்கீங்க, அப்படி கேட்க மாட்டேன். எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லை கடந்து போறீங்க. அப்புறம் பாத்தீங்கன்னா எல்லா யூட்யூபர்ஸ் சேர்ந்து நீங்க என்ன பண்றீங்கன்னு பேச வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.