பெங்களூருவில் அதிகரித்து வரும் டிராபிக் பிரச்னையை கடவுளே வந்தாலும் ஒரு நாளில் தீர்க்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டி.கே. சிவகுமாரின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஏற்பட்டுள்ள தொய்வுக்கும் பெங்களூருவில் அதிகரித்து வரும் டிராபிக் பிரச்னைக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சியே காரணம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.


பெங்களூரு டிராபிக் பிரச்னைக்கு காரணம் என்ன?


கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் பாஜக தலைமையிலான கூட்டணியும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த சூழலில், கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது.


ஆட்சிகள் மாறினாலும் கர்நாடக தலைநகர் பெங்களூரு டிராபிக் பிரச்னைக்கு தற்போது வரை தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், பெங்களூரு டிராபிக் பிரச்னையை கடவுளாகவே இருந்தாலும் ஒரு நாள் இரவில் தீர்க்க முடியாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.


சாலை கட்டுமானம் குறித்த பயிலரங்கை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், "பெங்களூருவை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மாற்ற முடியாது. கடவுளாலும் கூட அதைச் செய்ய முடியாது. சரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே அதை மாற்ற முடியும்" என்றார்.


டி.கே. சிவகுமார் என்ன சொன்னார்?


பெங்களூருவில் மோசமடைந்து வரும் போக்குவரத்து நிலைமைகள், தாமதமான மெட்ரோ விரிவாக்கம் மற்றும் போதுமான பொது போக்குவரத்து இல்லாதது குறித்து பெங்களூருவாசிகளும் நகர்ப்புற திட்டமிடுபவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.


பெரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அதன் செயல்படுத்தல் மெதுவாகவும் சீரற்றதாகவும் இருப்பதாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


டி.கே. சிவகுமாரின் கருத்தை விமர்சித்துள்ள பாஜக, "பிராண்ட் பெங்களூரு'வை உருவாக்குவேன் என்று சொன்னவர். கடவுளால் கூட இதைச் சரிசெய்ய முடியாது என்று கூறியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிறகு யாரால் முடியும்?


மக்களுக்கு சேவை செய்ய ஒரு நபருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ கடவுள் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்த அரசாங்கம் வளர்ச்சியைத் தவிர வேறு செயல்களில் ஈடுபட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது" என தெரிவித்துள்ளது.