இப்போதெல்லாம், பணத்தை கையில் வைத்துக்கொண்டு செலவு செய்வது மக்களிடையே வெகுவாக குறைந்துவிட்டது. பெரும்பாலானோர், GPay, PayTm, PhonePe போன்ற செயலிகளை பயன்படுத்தியே எல்லாவிதமான கட்டணங்களையும் செலுத்தி வருகின்றனர். அப்படி, ஜி பே-ல் நாம் செய்யும் சில பரிவர்த்தனைகளுக்கு கட்டணத்தை அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.?

இந்தியா முழுவதிலுமே, ரீசார்ஜ் செய்வது, கடைகளில் பொருட்கள் வாங்குவது, வரி, மின் கட்டணங்கள் செலுத்துவது உள்ளிட்ட ஏராளமான பரிவர்த்தனைகளை மக்கள் ஜி பே உள்ளிட்ட செயலிகள் மூலம் செய்து வருகின்றனர். இந்த செயலிகள் தங்கள் சேவைகளை இலவசமாக வழங்கி வந்த நிலையில், ரீசார்ஜ் செய்வதற்கு மட்டும் ரூ.3-ஐ கட்டணமாக ஜி பே வசூலித்து வந்தது. இந்நிலையில், தற்போது தங்கள் செயலி மூலமாக, கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி, மின்சாரம், கேஸ் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, பில் தொகையிலிருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

யூபிஐ உடன் வங்கிக் கணக்குகளை இணைத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படவில்லை.

ஏற்கனவே, போன் பே, பே டி.எம் நிறுவனங்கள் சில சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.