கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 


நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தல் திருவிழா நிறைவடைந்துள்ளது. மார்ச் 29 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரங்கள் களைக்கட்டியது. இதனைத் தொடர்ந்து மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வழக்கத்தை விட அதிகமாக 73.19% வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. 


காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இழுபறி நீடித்தது. அதனைத் தொடந்து இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. 11 மணி வரை காங்கிரஸ், பாஜக இருகட்சிகளும் ஓரளவு சமமான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அதன்பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. 


இறுதியாக வெளியான தோ்தல் முடிவின் படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு வேட்பாளரான முன்னாள் விவசாய சங்கத் தலைவர் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷன் புட்டண்ணய்யா மேல்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றதால் அதையும் சேர்த்தால் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 136 ஆக உள்ளது. 


அதேசமயம் பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் யார் முதலமைச்சராக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இருவரில் யாருக்கு பதவி கிடைக்கப் போகிறது என தொண்டர்கள் ஆர்வமுடன் உற்றுநோக்கியுள்ளனர். 


இந்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக அகில இந்திய காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் பெங்களூரு வருகை தந்துள்ளனர். மேலும் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா வருகிற  மே 17 ஆம் தேதி அல்லது 18 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சருக்கான பதவிக்கு சித்தராமையா,  டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவுவதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.