கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சதீஷ் லட்சுமணராவ் ஜார்கிஹோலி தெரிவித்த கருத்து அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்து என்ற சொல்லுக்கு கொச்சையான அர்த்தம் இருப்பதாகவும் இந்தியாவில் அந்த சொல் தோன்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்து என்ற சொல் எங்கிருந்து வந்தது? அது எங்களுடையதா? இது பாரசீக, ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்தது. இந்து என்ற வார்த்தைக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? பிறகு எப்படி ஏற்றுக்கொள்வது? இதை விவாதிக்க வேண்டும்" என்றார்.


இந்து என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்தால் வெட்கப்படுவீர்கள். அது மோசமானது என அவர் வீடியோவில் கூறி இருக்கிறார். இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதை அறிய விக்கிபீடியாவை பாருங்கள் என்றும் சதீஷ் லட்சுமணராவ் தெரிவித்துள்ளார்.


 






இவர் இப்படி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, இது இந்துக்களை கோபமூட்டும் வகையிலும் அவமதிக்கும் நோக்கிலும் இருப்பதாக தெரிவித்துள்ளது.


சதீஷ் லட்சுமணராவ், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக உள்ளார். மேலும், முந்தைய காங்கிரஸ் அரசில் வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பெலகாவி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


சமீபத்தில், இந்து மதம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. "சினிமா என்னும் கலையை சரியாக நாம கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போது தான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என தெரிவித்திருந்தார். 


வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு ஆதரவாக பேசிய நடிகர் கமல், "ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது என்றும், வைணவம், சைவம், சமணம் என இருந்தது என கமல் தெரிவித்தார். 


"எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்த நிலையில், எட்டாம் நூற்றாண்டில் அதையெல்லாம் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வந்தார். இதெல்லாம் சரித்திரம். ஆனால், இங்கே அதெல்லாம் தேவையில்லை. இது சரித்திர புனைவு பற்றி புகழ்ந்து கொண்டிருக்கும் நேரம்" என்றார்.