மேகதாது அணை கட்டப்படும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முதுஒத்துழைப்பு தருமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, கர்நாடகா முதல்வர் பி.எஸ் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
எடியூரப்பா தனது கடிதத்தில், "400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும், பெங்களூர் குடிநீருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட 4.75 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்துவம் மேகதாது நீர்மின் திட்டங்கள் செயல்படுத்த உள்ளன. இதன்மூலம், காவேரி நடுவர் மன்ற தீர்ப்பின் படியும், உச்சநீதிமன்றத்தின் இறுதி தீரப்பின் படியும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்குவதை நெறிமுறைப்படுத்த முடியும். எனவே, இத்திட்டம் இருமாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக பலனளிப்பதாக அமையும்.
மேகதாது திட்டம் எந்த வகையிலும் தமிழக மக்களின் நலன்களைப் பாதிக்காது என்பதே உண்மை நிலை. இருப்பினும், தமிழ்நாடு அரசு மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் வேண்டி கர்நாடகா அரசு விண்ணப்பித்துள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
தமிழ்நாட்டில், காவிரியின் பவானி துணை ஆற்றில், குந்தா, சில்ஹல்லா ஆகிய இரண்டு பெரிய நீரேற்று புனல்மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சி செய்துவருகிறது. 2021 பிப்ரவரி மாதம், குந்தா புனல்மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கியது. மற்றோரு திட்டம் மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்து வருகிறது. மேற்கூறிய திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக கார்நாடகா அரசிடம் எந்தவகையிலும் கலந்தாலோசிக்கவில்லை.காவிரி படுகையில்,மேலும் பல திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
எனவே, தமிழக அரசு அனைத்தையும் நல்ல முறையில் பரிசீலித்து, மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல உறவை மேம்படுத்தவே விரும்புகிறேன். முரண்பாட்டுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வகையில் இருமாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தையை தொடங்கலாம்" என்று தெரிவித்தார். இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், கர்நாடகா முதல்வரின் கடிதத்துக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, மேகதாது அணை விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில், அணை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கர்நாடகம் குவித்து வருவதாக கடந்த ஏப்ரல் 14-ந் தேதி செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, மேகதாது பகுதியில் அணை கட்டுமானத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 உறுப்பினர்களை கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு, மேகதாது அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும், அணைக்கு அனுமதி கோருவதற்கான கர்நாடக அரசின் விண்ணப்பம் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் பசுமைத்தீர்ப்பாயம் தலையிடத் தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்துவைத்துவிட்டது.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கவில்லை என்று நிரூபிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழகம் தவறிவிட்டது. மேகதாது அணை கட்ட நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதி அளிக்காத நிலையில், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் செய்திருந்தால் அது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். மேகதாது அணை தொடர்பான வழக்கில் அது தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு உதவும்" என்று தெரிவித்தார்.