Karnataka Election Result 2023: 224 தொகுதிகளில் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மே 10 ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் மூலம் பதிவான 75,603 வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்னர் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கின்றன. காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவைக்கு வாய்ப்பு என தகவல் வெளியானது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மஜதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
யாருக்கு வாய்ப்பு..?
தேர்தலில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களில் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முதலிடத்தில் இருக்கிறார். இவர் மீது அதிகபடியான எதிர்பார்ப்பு நிலவிகிறது. இவரை தொடர்ந்து, முன்னாள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரின் நிலைமை என்ன என்பது குறித்தும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதேபோல், மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதுதவிர, அம்மாநில முன்னாள் துணை முதல்வர் லட்சுமண சவடி, சட்டசபை சபாநாயகர் விஷேஷ்வர் ஹெக்டே, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா, காங்கிரஸ் தலைவரின் மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்றும் உச்சகட்ட ஆர்வத்தில் இந்தியா உள்ளது.