மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்பார்வை செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்தது.


பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு மாதத்திற்கு இந்த குழு விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி, விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்தது.


ஆனால், ஆறு பேர் கொண்ட குழுவின் முடிவுகளை அமைச்சகம் இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோர் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக  போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் புகார் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.


வாக்குமூலம் அளித்த பிரிஜ் பூஷன் சரண் சிங்: 


இதற்கிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடினர். மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.


இதையடுத்து, பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் டெல்லி காவல்துறை அதிகாரிகள். பாலியல் புகார்கள் தொடர்பாக அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.


விசாரணையின்போது, தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் இந்த வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


மல்யுத்த வீரர்களுடன் கைக்கோர்த்த விவசாயிகள்:


சமீபத்தில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர் விவசாயிகள். போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தரை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதனால், அங்கு கிட்டத்தட்ட 2000 காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.


சிங்கு எல்லையில், துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர்.  300 டெல்லி போலீசார் வடக்கு மண்டலத்தில் நிறுத்தப்பட்டனர். திக்ரி பார்டர், நங்லோய் சௌக், பீராகரி சௌக் மற்றும் முண்ட்கா சௌக் ஆகிய இடங்களில் 200க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் துணை ராணுவப் படையுடன் குவிக்கப்பட்டனர்.


புது தில்லி மண்டலத்தில் 1,300க்கும் மேற்பட்ட டெல்லி போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். ஜந்தர் மந்தரில் 13 எச்டி கேமராக்களை பொருத்தப்பட்டுள்ளது.