நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. கடந்த மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம்  73.19 சதவீத வாக்குகள் பதிவானது.  இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களுக்கு அதிகமாகவே முன்னிலை வகிக்கிறது. 


கே.ஜி.எஃப். தொகுதியில் வெற்றி:


கர்நாடகா கோளார் தங்க வயல் தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.  இந்நிலையில் இத் தொகுதியில் பாஜக சார்பில் அஷ்வினி சம்பங்கி, காங்கிரஸ் கட்சி சார்பில் ரூப் கலா, ஜனதா தளம் சார்பில் ரமேஷ் பாபு ஆகியோர் போட்டியிட்டனர். 50,467 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூப்கலா வெற்றி பெற்றது.


இதனிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில்,  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 


 ”கர்நாடகா தேர்தலில் எங்களால் முத்திரை பதிக்க முடியவில்லை. முடிவுகள் வந்தவுடன் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். தேசியக் கட்சி என்ற வகையில் தேர்தலில் செய்யப்பட்ட குறைபாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும். இத் தோல்வியை நாங்கள் எங்கள் முன்னேற்றத்திற்கான எடுத்துக்கொள்கிறோம்”  என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 


ராகுல்காந்தி நன்றி:


கர்நாடகா தேர்தல் வெற்றியை தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ முதலில் கர்நாடக மாநிலத்தில் பாடுபட்ட தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதலாளிகளுக்கு வேலை செய்யும் பா.ஜ.க விற்கு கர்நாடகா மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலை அனைத்து மாநிலங்களிலும் தொடரும். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும்” என்று தெரிவித்தார்.


அதேபோல அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், இது பொதுமக்களின் வெற்றி. மோசமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எங்களின் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக வேலை பார்த்துள்ளனர். மக்கள் எங்களின் வாக்குதிகளுக்காக வாக்கு அளித்துள்ளனர் என்றார்.