Kanwariyas Attack CRPF Jawan: உத்தரபிரதேசத்தில் சிஆர்பிஎஃப் வீரரரை சரமாரியாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிஆர்பிஎஃப் வீரரை தாக்கிய பக்தர்கள்:

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரை கன்வாரியாக்கள் எனப்படும், பக்தர்கள் கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நின்றுகொண்டிருந்த பிரம்மபுத்திரா மெயில் ரயிலில் ஏறவிருந்த அந்த வீரரை, காவி உடை அணிந்திருந்த ஒரு கும்பல் பிடித்து இழுத்து கீழே தள்ளி சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சரமாரியாக தாக்கியுள்ளது. 

கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ:

அந்த வீடியோவில், சிஆர்பிஎஃப் வீரரை சுற்றி வளைத்த கும்பல் அவரது சட்டையை பிடித்து தாக்கியுள்ளது. திருப்பி அடிக்க முயன்ற நபரை மொத்த கும்பலும் சேர்ந்து கீழே தள்ளி சரமாரியாக எட்டி உதைத்துள்ளன. ஒருநபர் எகிறி சிஆர்பிஎஃப் வீரரின் முதுகின் மீது குதித்துள்ளார். அந்த கும்பலில் இருந்த சிறுவர்கள் கூட கண்மூடித்தனமாக உதைத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் சத்தம்போட்டு அந்த கும்பலை நீக்கிவிட்டு வீரரை மேலே எழுப்பினர். கோபத்தில் அவர் அந்த கும்பலின் மீது பாய, அவர்கள் மீண்டும் மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி ஒட்டுமொத்த கும்பலும் மிருகத்தனமாக, அவரது சீருடைக்கு கூட மரியாதை அளிக்காமல் பொதுவெளியிலேயே தாக்க” சுற்றியிருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்:

சிஆர்பிஎஃப் வீரர் மீதான இந்த தாக்குதலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “பக்தர்கள் எனப்படும் கன்வாரியாக்களால் நமது நாட்டிற்கு சேவை செய்யும் ஒரு வீர்ர் தாக்கப்பட்டுள்ளார். இந்த மதத்தை சார்ந்தது அல்ல, ஒட்டுமொத்த சட்ட-ஒழுங்கும் நிலை குலைந்து இருப்பதை காட்டுகிறது. நமக்காக நமது வீரர்கள் அனைத்து தியாகங்களும் செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கிடைப்பது இதுதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

7 பேர் கைது

வெளியாகியுள்ள தகவலின்படி, கவுண்டரில் டிக்கெட் எடுக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீஆர்பிஎஃப் வீரர் மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் தொடங்கிய கன்வார் யாத்திரை வரும் 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இது சாவன்  மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் யாத்திரையாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கையிலிருந்து புனித நீரை குடங்களில் (கன்வார்களில்) சுமந்து, வெறுங்கால்களில் தங்கள் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களுக்கு கொண்டு செல்வார்கள். இந்த யாத்திரை 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமானதாகும்.