உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் போலீஸ் காவலில் இருந்த நகை வியாபாரி உயரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இச்சூழலில், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஆளும் பாஜக எம்பி கோரிக்கை விடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, 9 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 12ஆம் தேதி, பல்வந்த் சிங் என்ற நகைக்கடை வியாபாரி மீது மற்றொரு நகைக்கடைக்காரர் திருட்டு புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டின் பேரில் ரானியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு பல்வந்த் சிங் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து பல்வந்த் சிங்கின் குடும்பத்தினர் பேசுகையில், "காவல் நிலையத்தில் அவரை சந்திக்கச் சென்றபோது, அவர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டோம்" குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் இரவு 11 மணியளவில் இறந்துள்ளார்.
பல்வந்த் சிங்கின் மரணம் குறித்து விளக்கம் அளித்த கான்பூர் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் சுனிதி, "பிரேத பரிசோதனையில் பல்வந்த் சிங் மாரடைப்பால் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்றார்.
ஆனால், அவரின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, முழங்கால்கள் மற்றும் கீழ் முதுகில் கடுமையான தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடலில் உள்ள தழும்புகளை குடும்பத்தினர் பார்த்தபோது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை உடலை தகனம் செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர். இறுதியில் ஒன்பது போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாஜக எம்.பி. தேவேந்திர சிங் போலேயின் தலையீட்டின் பேரில், தற்போது மீண்டும் பிரேத பரிசோதனையை டாக்டர்கள் குழு நடத்தி வருகிறது. இன்னும், அறிக்கை வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து தேவேந்திர சிங் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் உண்மைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.
பல்வந்த் சிங்கின் உடலில் 22 ஆழமான காயங்கள் இருந்தன. உள்ளூர் அரசியலால் தூண்டப்பட்ட பொய் வழக்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்தும் (முதலமைச்சர்) யோகி ஆதித்யநாத்திடம் தெரிவித்துள்ளேன்.
குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளோம். பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் தாய்க்கு சிறிது நிலம்; குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு, தாய்க்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.