பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை கங்கனா ரனாவத். சுசாந்த் சிங் ராஜ்புத் இறப்பையொட்டி பாலிவுட்டின் வாரிசு அரசியல் மீது வைத்த விமர்சனம் தொடங்கி, சமீப காலமாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்கு வித்திட்டு வருகின்றன. 1947 ஆம் ஆண்டு நாடு பெற்ற சுதந்திரம் வெறும் பிச்சை என்று விமர்சித்த கங்கனா, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான்கள் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்களை விமர்சித்தும், ஷாஷீன் பாகில் போராடிய ஒரு பெண்மணியை நூறு ரூபாய்க்கு வந்தவர் என்றும் விமர்சித்திருந்தார்.




இந்தக் கருத்து மிகப் பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் அண்மையில் தனது குடும்ப நிகழ்ச்சிக்காக பஞ்சாப் சென்ற கங்கனாவின் காரை விவசாயிகள் மறித்தனர். அதன் பின்னர் அவர்களிடம் மன்னிப்புக்கேட்ட பின் அங்கிருந்து கங்கனா செல்ல விவசாயிகள் அனுமதித்தனர். இது குறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட கங்கனா பாதுகாப்பு மட்டும் இல்லாமல் இருந்தால், தான் அடித்தே கொல்லப்பட்டிருப்பேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகை கங்கனா உத்திரபிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணாஜென்மஸ்தானத்திற்கு வழிபாட்டிற்காகச் சென்றார்.




வழிபாடு செய்த பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், 2022 ஆம் ஆண்டு உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கனா,  “ நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் யார் தேசியவாதிகளோ அவர்களுக்காக நான் பிரச்சாரம் செய்வேன். 


முதல்வர் ஆதித்யநாத் கிருஷ்ணரின் உண்மையான ஜென்மஸ்தானை மக்கள் அறிய தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். தொடர்ந்து சர்ச்சைக் கருத்துக்களை கூறுவது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, “ யார் நேர்மையானவர்களோ, தைரியமானவர்களோ, தேசியவாதிகளோ, தேசத்தைப் பற்றி பேசுபவர்களோ அவர்களுக்கு நான் பேசுவது சரியென்று தெரியும்” என்று பேசினார்.