கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு கோரிக்கை:


கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எந்தவொரு ஜனநாயகமும் செழிக்க, அதன் குடிமக்கள் அதில் பங்கேற்க வேண்டியது அவசியம். நம் நாட்டுக்கு இது ஒரு முக்கிய தருணம். டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மீதான கொடூரமான தாக்குதலைத் தடுக்க வேண்டும் என நாட்டின் அனைத்து குடிமக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட மசோதா மீது பொதுமக்கள் கருத்தை தெரிவிக்க இன்றே கடைசி நாள். எனது கடிதத்தையும், மசோதா மீது உங்கள் கருத்து மற்றும் பார்வையை சமர்பிப்பதற்கான இணைப்பையும் பதிவில் வழங்குகிறேன். அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து நமது ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று, கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.






தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஆபத்து:


அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை முடக்கும் விதமாக உள்ளது. அவ்வாறு நடைபெற்றால் ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை பாதிக்கும். புதிய மசோதாவில் ஆபத்தான மற்றும் தேவையில்லாத  பிரிவாக, தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக 8 (1) (J) இணைக்கப்பட்டுள்ளது. அந்த பிரிவு நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நிராகரிக்க அரசு தரப்புக்கு அனுமதி கிடைக்கும். அதாவது, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு வழங்க மறுக்க முடியாத எந்தவொரு தகவலையும், எந்தவொரு தனிநபருக்கும் வழங்க மறுக்க கூடாது எனும், அடிப்படை உரிமையே மறுக்கப்படும். 


கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை:


பல்வேறு உண்மைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளவும், பல ஊழல் சம்பவங்களை அம்பலப்படுத்தவும் காரணமாக உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை முடக்கும் விதமான பிரிவை உள்ளடக்கிய, டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள். ஆனால் பெரும்பாலான மக்கள் இதுவரை மசோதா மீது தங்கள் கருத்தை தெரிவிக்கவில்லை. எனவே அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் தரவுகள் மசோதா மீது தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கருத்தை தெரிவிப்பதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்றும், கமல் ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். 


புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:


தனிநபர் தரவுகளை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நியாயமாகவும், தனிநபர்களுக்கு வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே, புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவின் முதல் இரண்டு அம்சங்களாக உள்ளன.  விதிகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, ரூ.15 கோடி அல்லது அதன் சர்வதேச வருவாயில் 4 சதவிகிதம் அபராதமாக விதிக்க, பழைய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை தற்போது ரூ.500 கோடியாக உயர்த்தி புதிய மசோத பரிந்துரைத்துள்ளது.