‘சந்திரயான் 3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம், நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சென்ற மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது.


40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.


இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற்றது. 


இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் முதன்முதலாகக் கால் பதித்து சரித்திர சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு உலக அரசியல் தலைவர்கள் தொடங்கி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்  வரை, திரைத்துறையினர், பல்வேறு பிரபலங்கள், நாட்டு குடிமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இஸ்ரோவையும், சந்திரயான் 3 விண்கலத்தையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.


“செயற்கைக்கோள் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது முதல் நிலவில் இறங்கியுள்ளது வரை - என்ன ஒரு பயணம்! இஸ்ரோ குழு நம் நாட்டின் பெருமை. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள் இது.


இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.


 






மேலும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சிரஞ்சீவி, மோகன் லால் ஆகியோர், இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் வைரமுத்து எனப் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.