இந்தியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களும், வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களும் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீபகாலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.


உயிருக்கு ஆபத்து


இந்த நிலையில், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ சீக்கிய சமுதாயத்தினர் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் உலகளாவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியவை இயக்க அனுமதிக்க மாட்டோம். வரும் 19-ந் தேதி முதல் ஏர் இந்தியா சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சீக்கிய சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் இது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்”


இவ்வாறு அவர் பகிரங்க எச்சிரிக்கை விடுத்துள்ளார்.


பகிரங்க எச்சரிக்கை:


மேலும் அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் வரும் இந்திரா காந்தி விமான நிலையம் மூடப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அது மட்டுமின்றி, இந்த நவம்பர் 19 உலக பயங்கரவாத கோப்பையுடனும் ஒத்துப்போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


அந்த நாளில் சீக்கிய சமூகத்தின் மீதான இந்தியாவின் அடக்குமுறையை உலகம் காணும். பஞ்சாப் சுதந்திரம் அடைந்தவுடன் விமான நிலையத்தின் பெயர் ஷாகித்பியாந்த்சிங், ஷாகித் சத்வந்த் சிங் விமான நிலையம் எனறு பெயர் மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்திராகாந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அவரது பாதுகாவலர்கள் பெயரே பியாந்த்சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கனடாவில் தற்போது உள்ள பன்னுனின் இந்த பகிரங்க எச்சரிக்கை இந்திய அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனென்றால், வரும் நவம்பர் 19-ந் தேதி உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் ஏர் இந்தியாவை இயக்க விட மாட்டோம் என்றும், அன்று முதல் ஏர் இந்தியாவில் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்றும் காலிஸ்தான்கள் பயங்கர எச்சரிக்கை விடுத்திருப்பது அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.


பன்னுனின் இந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதேசமயம், காலிஸ்தான் விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலமாக சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.