மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 20 வயது இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தில் அவரது காதலனே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வெட்டி கொலை செய்தது மட்டும் இன்றி ரயில் நிலையம் அருகே உள்ள புதரில் அந்த உடலை புதைத்தாகவும் கூறப்படுகிறது.
மும்பையில் பரபரப்பு சம்பவம்: பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், யஷாஸ்ரீ ஷிண்டே என்ற இளம்பெண் கொல்லப்பட்டுள்ளார். 20 வயதான யஷாஸ்ரீ ஊரான் பகுதியில் வசித்து வந்துள்ளார். 25 கிமீ தொலைவில் உள்ள பேலாபூரில் வேலை செய்து வந்திருக்கிறார். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (நவி மும்பை) விவேக் பன்சாரே கூறுகையில், "நள்ளிரவு 2 மணியளவில் ஊரான் ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. அவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை இது குறிக்கிறது. எங்களின் முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் காரணமாக அந்த பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.
காதலன் மீது எழுந்த சந்தேகம்: பெண்ணின் காதலனும் காணாமல் போயுள்ளார். இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைக் கண்டுபிடிக்க 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
சமீபத்தில், மகாராஷ்டிராவில் சிறுமி உள்பட நான்கு பேர் சேர்ந்து மற்றொரு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் கடந்தாண்டு அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார்.
அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.